Saturday, June 8, 2013

மூன்று நாட்களை கடந்தாலே அது வெற்றிப்படம் என்கிறார்கள்! - வைரமுத்து

                           இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் 'கேரள நாட்டிளம் பெண்களுடனே...' இப்படத்தில் புதுமுகம் அபி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக காயத்ரி, அபிராமி, தீக்ஷிதா என்ற மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் பட்டிமன்ற புகழ் பேராசிரியர் ஞானசம்பந்தன் நடிக்கிறார். எல்லா பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார்.
    இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கமலா திரையரங்கில் நடந்தது. பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட, இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் , ஜேம்ஸ் வசந்தன் பெற்றுக் கொண்டார்கள்.
       படக்குழுவினரை வாழ்த்தி கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது -
               "இந்த படத்தில் நடித்திருக்கும் கதாநாயகிகள் மூன்று பேரும் கேரளத்தை சேர்ந்தவர்கள். இங்கு மேடையில் அவர்கள் பேசும்போது அவர்களிடம் ஒரு அச்ச உணர்வை கவனித்தேன். பயப்படாதீர்கள், தமிழகத்தில் தமிழ் பேசுகிற சிலரை விட நீங்கள் நன்றாகவே பேசுகிறீர்கள். கதாநாயகன் அபி இந்த மூவரையும் படப்பிடிப்பில் எப்படி சமாளித்தார் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. நான் அவரிடம், 'தம்பி உங்களுக்கு சொந்த ஊர் எது என்றேன். அவர் அல்லி நகரம்' என்றார். அல்லி நகரத்தில் பிறந்த அர்ஜுனனுக்கு ஒரே நேரத்தில் மூன்று பெண்களை சமாளிக்கவா தெரியாது...! (கைத்தட்டல்கள்)
     இவர் சொந்த ஊரை விட்டுவிட்டு இங்கு சென்னைக்கு வந்தது சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக. கவலைப்படாதீர்கள் தம்பி. அல்லிநகரத்தில் இருந்து சென்னைக்கு வந்த யாரும் வெற்றி பெறாமல் போனதேயில்லை.
        இந்த படத்தின் டைரக்டர் எஸ்.எஸ்.குமரன் என்னை வந்து சந்தித்து ஒரு நல்ல கதை இருக்கிறது என்றார். என்னிடம் வருகிற இயக்குனர்களிடம் மூன்று நிமிடத்தில் கதையை சொல்லுங்கள் என்பேன் நான். மூன்று நிமிடத்தில் சொல்ல முடியாத கதை நல்ல கதை இல்லை என்பது என் கருத்து. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் கதை என்ன? புற்றுநோய் வந்த மனைவியை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான் கணவன். அந்த மருத்துவர் மனைவியின் முன்னாள் காதலன். இவ்வளவுதான் கதை.
       இப்படி இராமாயணத்தை, மகாபாரதத்தை, சிலப்பதிகாரத்தை கூட இரண்டு மூன்று நிமிடங்களில் கதையாக சொல்லிவிடலாம். எஸ்.எஸ்.குமரனும் என்னிடம் அப்படிதான் இந்த படத்தின் கதையை சொன்னார். ஒரு தமிழன் கேரள பெண்ணைதான் மணமுடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கிளம்பி கேரளாவுக்கு செல்கிறான். அவ்வளவுதான் கதை. அதற்கப்புறம் அதை தேவைப்படுகிற அளவுக்கு விரிவாக்கிக் கொள்ளலாம். மெருகேற்றிக் கொள்ளலாம். சரி, நான் பாடல் எழுதுகிறேன் என்று கூறிவிட்டேன். அதற்கப்புறம் அவர் என்னிடம் கேட்டுக் கொண்டது மற்றொரு ஆச்சர்யமான விஷயத்தை. சார், எல்லா பாடல்களையும் நீங்களே எழுதிக் கொடுங்கள். அதற்கப்புறம் நான் மெட்டுப் போட்டுக் கொள்கிறேன் என்றார்.
         இன்று திறமையான இசையமைப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் தனக்கான வியாபாரத்தை தக்க வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் பாடலாசிரியர்களின் நீண்ட நெடிய வரலாற்றை பார்த்தால் அவர்கள் யாரை விரும்புவார்கள் தெரியுமா? ஜி.ராமநாதனையா, எஸ்.வி.வெங்கட்ராமனையா, எம்.எஸ்.விஸ்வநாதனையா, இளையராஜாவையா, என்று கேட்டால் அவர்கள் விரும்புவது கே.வி.மகாதேவனைதான். அவர் ஒருவர் மட்டும்தான் நீங்கள் வார்த்தைகளை கொடுத்துவிட்டு வீட்டுக்கு போங்கள். நான் அதை பாடலாக்கிவிட்டு கூப்பிடுகிறேன் என்று சொன்னவர். இல்லையென்றால் 'கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா, அதில் கட்டில் அமைந்ததடா' என்ற வார்த்தைக்கு அவர் மெட்டு அமைத்திருக்க முடியாது.
      எல்லா பாடல்களும் எழுதிக் கொடுத்துதான் மெட்டமைக்க வேண்டும் என்பது இல்லை. எல்லா மெட்டுகளும் அமைக்கப்பட்ட பின்புதான் பாடல் எழுதப்பட வேண்டும் என்பதும் இல்லை. தேவைப்படுகிறபோது கலந்து செய்தால் பாடலாசிரியர்களும் இசையமைப்பாளர்களும் தமிழ் மக்களுக்கு தங்கள் விருந்துகளை தனித்தனியாக படைக்கலாம்.
           இந்த படத்திற்கு பாடல்களை எழுதிக் கொடுத்த பின்பு அதை பாடலாக்கி எனக்கு போட்டுக் காட்டினார் குமரன். எல்லா பாடல்களையும் மெட்டுப் போட்ட பின்புதான் எழுதிய மாதிரி அவ்வளவு அற்புதமாக வந்திருந்தது. நான் அவரை பாராட்டினேன். கொண்டாடினேன். இந்த நேரத்தில் நான் அவருக்கு சொல்லிக் கொள்வது இதுதான். இனிமேல் குமரன் பாட்டெழுத என்னிடம் கேட்டு வந்தால் எனது சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொள்கிறேன்.
        முன்பெல்லாம் 175 நாட்கள் படங்கள் ஓடும். கலைஞர் எம்ஜிஆர் போன்றவர்கள் எல்லாம் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு கேடயம் கொடுப்பார்கள். அது மெல்ல மெல்ல மாறி மூன்று வாரங்கள் ஓடினால் வெற்றிப்படம் என்றாகியது. அதற்கப்புறம் எட்டு நாட்களை கடந்தால் வெற்றிப்படம் என்றார்கள். இப்போது மூன்று நாட்களை கடந்தாலே அது வெற்றிப்படம் என்கிறார்கள். எதிர்காலத்தில் வெற்றிகரமான மூன்றாவது ஷோ என்று போஸ்டர் அடித்தாலும் ஆச்சர்யமில்லை போலிருக்கிறது. ஏழே முக்கால் கோடி தமிழர்கள் வாழ்கிற நாட்டில் ஏழு நாட்கள் படங்கள் ஓடினால் அது பெரிய வெற்றி என்று கொண்டாடுகிற நிலைமைதான் இருக்கிறது.
        ஒரு கலைஞன் வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது என்று நினைப்பவன் நான். சினிமாவுக்கு வந்த பின்பு நான் எனக்குள்ளே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகள் இதுதான். சினிமா எடுப்பதில்லை. சினிமா தொடர்பான எந்த வணிகத்திலும் ஈடுபடுதில்லை. சினிமாவில் நடிப்பதில்லை. மொழியோடு தொடர்புடைய வேலையை தவிர வேறு எதையும் செய்வதில்லை என்று. மனசு பூ போல லேசாக இருக்க வேண்டும். வா என்று அழைத்தவுடன் வந்து நிற்பது மொழி மட்டும்தான். வேறு ஒன்றும் இல்லை. தமிழுக்கு தொண்டு செய்ய நாம் காத்திருக்கிறோம். நாம் கூப்பிட்டால் ஓடிவந்து தொண்டு செய்ய தமிழ் காத்திருக்கிறது.
        உலகத்திலே அதிக து£ரம் கொண்டது எது தெரியுமா? நிலாவுக்கும் நமக்குமான து£ரம் அல்ல, பூமிக்கும் சூரியனுக்குமான து£ரம் அல்ல. ஒருவருடைய பாக்கெட்டுக்கும் இன்னொருவருடைய பாக்கெட்டுக்கும் இடையிலான து£ரம்தான். அங்கிருந்து இது இங்கு வந்துவிடாது. ஆனால் தமிழ் நாம் கூப்பிட்டவுடன் ஓடோடி வந்து டேபிளில் அமர்ந்து கொள்கிறது. அதனால் இந்த தமிழ் வருகிற வழியை அடைத்துவிடக் கூடாது என்பதால்தான் நான் வணிகத்தில் ஈடுபடுவதில்லை. "
        இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து பேசினார். விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் தேனப்பன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன், இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், ஜேம்ஸ் வசந்தன் உட்பட பல்வேறு திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.


Saturday, April 20, 2013

கொசுவை பற்றி ஒரு பாடல் !




"காதலை மையமாக வைத்து ஏராளமான படங்களும், நட்பை மையப்படுத்தி ஏராளமான படங்களும் தமிழ்சினிமாவில் இதற்கு முன் நிறைய வந்திருக்கின்றன. ஆனால் ஒரு புது விதமான நட்பையும் அதன் பெருமையையும் சொல்லப் போகிறேன்" என்கிறார் ''முகம் நீ அகம் நான்' படத்தின்  இயக்குனர் ரா.நா.சரவணன்.
இப்படத்தை பற்றி சரவணன்  மேலும் கூறும்போது
"ஒரு திரைப்படம் என்பது பலரது கூட்டு முயற்சி. சின்ன சின்ன விஷயங்களுக்கே தடையும் தாமதமும் வருவது சகஜம். ஒரு திரைப்படத்தை தயாரிக்கும்போது எவ்வளவு பிரச்சனைகள் வரும்? ஆனால் அதையெல்லாம் மீறி எனக்கும் தயாரிப்பாளர் பா.எழில் இனியனுக்கும் தோள் கொடுக்கிற கலைஞர்கள் கிடைத்ததுதான் நாங்கள் செய்த பாக்கியம்
 இப்படத்தில் நம்மை இரவில் து£ங்க விடாமல் தவிக்க விடும் கொசுவை பற்றி ஒரு பாடல் வருகிறது. அந்த பாடலை நானே எழுதியிருக்கிறேன்

கூறுகெட்ட பிறப்பே, கூவத்தோட சிறப்பே
நித்தம் பெருகிறீயே கொசுவே
சித்தம் கதி கலங்க நித்தம் கடிக்கிறீயே கொசுவே
ரத்தம் குடிக்கிறீயே கொசுவே

என்று துவங்கும் இப்பாடலை புஷ்பவனம் குப்புசாமி பாடியிருக்கிறார். மோகன்ஜி இசையமைத்திருக்கிறார். நடன இயக்குனர் கூல் ஜெயந்த்தும், மைனா புகழ் நாகலட்சுமியும் ஆடியிருக்கிறார்கள்.
 இந்த கொசுப் பாடலில் ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறேன்.
கதாநாயகியாக ஹாசினி நடிக்கிறார். கதாநாயகனாக சீனுவாசன் அறிமுகமாகிறார். சினிமாவுக்காக இவருக்கு எஸ்.எஸ்.வாசன் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது
லேகியம் விற்கிறவராக நடிக்கிறார் கஞ்சா கருப்பு.

இப்படத்திற்காக இரட்டை குழந்தைகளை நடிக்க வைக்க விரும்பி சுமார் நு£ற்றுக்கும் மேற்பட்ட ஜோடி சிறுவர்களை சந்தித்து . இறுதியில் மறைந்த நகைச்சுவை நடிகர் கே..தங்கவேலுவின் பேரன்கள் சஞ்சய், கிஷோர் ஆகியோரை கண்டுபிடித்து நடிக்க வைத்துள்ளோம்".என்கிறார்.
 ரா.நா.சரவணனின் தந்தை ராதா ஒரு தெருக்கூத்து கலைஞர். ஏராளமான மேடை நாடங்களை அரங்கேற்றியிருக்கிறார். அவரைப்போலவே சரவணனும் மேடை நாடகங்களை இயக்கி நடித்தவர்தான். அதுமட்டுமல்ல,  பத்திரிகைகளில்  சினிமா நிருபராக பணியாற்றியிருக்கிறார். முக்கியமாக இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் இயக்குனராகியிருக்கிறார்

Monday, April 8, 2013

'நீ கேட்ட வசனம், இந்த சிகரெட்ல இருந்திருக்கு..'! -சீமானிடம் சொன்ன மணிவண்ணன்



யக்குநர் மணிவண்ணனின் இயக்கிய 'அமைதிப் படை'யின் இரண்டாம் பாகமான 'நாகராஜசோழன் எம்ஏ,எம் எல் ஏ 'படத்தில்  சத்யராஜுடன் இணைந்து சீமானும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தில் நடித்தது பற்றி அவர் கூறும்போது :
  "இந்த சினிமா மொழியை என்னைப் போன்றவர்களுக்கு மிக எளிமையாகக் கற்றுத் தந்தவர் என் அப்பா மணிவண்ணன்.
    எந்தக் காட்சியையும் அவர் பேப்பரில் எழுதிவைத்து காட்சிப்படுத்தியதில்லை. படப்பிடிப்பு தளத்துக்கு போன பிறகுதான் காட்சிகளைத் தீர்மானிப்பார்.
    வசனங்கள் அப்படியே அருவி மாதிரி வந்து விழும். அதைப் பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கும்.
    ஒரு காட்சிகளில் வசனம் இன்னும் நன்றாக இருக்கலாம் என நான் சொல்வேன். உடனே அவர், அப்படியா... சரி, ஒரு டீ கொடு என்பார். அதை அருந்துவிட்டு... ஒண்ணும் சரியா வரலியேடா... ஒரு சிகரெட் கொடு என்பார். அதை ஒரு முறை இழுத்துவிட்டு, அடுத்த நொடியில் அனல் பறக்கும் வசனம் வந்துவிழும். 'பார்த்தியா.. நீ கேட்ட வசனம், இந்த சிகரெட்ல இருந்திருக்கு' என்பார்.
    அதேபோல, படப்பிடிப்பின்போது, சில நடிகர்கள் என்னிடம் அல்லது என்னைப் போல உதவியாளராக இருந்த நண்பன் சுந்தர் சியிடம் போய், அடுத்த காட்சி என்னவென்று கேட்பார்கள். அது எங்களுக்கு தெரிந்தால்தானே சொல்வதற்கு. நாங்கள் அவர்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு நகர்ந்துவிடுவோம். இன்னொன்று அது என்ன காட்சி என்று என் அப்பா மணிவண்ணனுக்கும்கூடத் தெரியாது. அந்த இடத்தில்தான் அதை தீர்மானிப்பார். யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் மெருகேற்றி பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பார்.
    இந்த நாகராஜசோழன் திரைப்படம் வெறும் அரசியல் படமல்ல. எமது ஈழ மக்களின் வலியை, அவர்களுக்கு நேர்ந்த கொடூரத்தின் உவமானமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை நம் மக்களின் கதை.
    சத்யராஜ் மற்றும் என் அப்பா மணிவண்ணன் இருவருக்கும் ஒரே அலைவரிசையில் சிந்திப்பவர்கள். மணிவண்ணன் எழுத்துக்கு உயிர்தரும் நடிப்பு சத்யராஜூடையது. அவருக்குப் பிடிக்காமல் எப்படி மணிவண்ணன் எழுத்தை உச்சரிப்பார்... ஆகவே அவருக்குள்ளும் அரசியல் இருக்கிறது.
     இந்தப் படத்தில் என் தம்பி ரகுவண்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு இனி திரையுலகில் சிறப்பான இடத்தை இந்தப் படம் பெற்றுத் தரும்," என்றார்.
 

வில்லன் வேடத்தை மணிவண்ணன் தவிர யாராலும் உருவாக்க முடியாது ! -சத்யராஜ்

"அமைதிப்படை' அமாவாசைக்கு இணையாக ஒரு வில்லனை யாராலும் படைக்க முடியாது. அந்த ஆற்றல் மணிவண்ணனுக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான் அவர் படத்தில் வில்லனாக நடித்தேன். அதை மிஞ்சும் ஒரு பாத்திரத்தை யாராவது உருவாக்கினால் அந்தப் படத்தில் வில்லனாக நடிக்க நான் தயார்" என்றார் நடிகர் சத்யராஜ்.
   
அமைதிப்படை 2 படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில்,
              


"எனக்கு வில்லனாக நடிப்பதுதான் பிடிக்கும். அப்படி நடித்த காலத்தில் மிகுந்த சந்தோஷமாக இருந்தேன். எந்த பொறுப்பும் கிடையாது.
ஆனால் ஹீரோவான பிறகு இருந்த சந்தோஷமெல்லாம் போயிடுச்சி. 1994-ம் ஆண்டு மணிவண்ணன் என்கிட்ட அமைதிப்படை கதையைச் சொன்னார். வில்லனா இருந்து ஹீரோவாகி நமக்குன்னு ஒரு இடத்தைப் பிடிச்சிக்கிட்டிருந்த  நேரத்துல மீண்டும் வில்லனான்னு மணி கிட்ட கேட்டேன். அவரோ, ஹீரோவும் நீங்கதான், வில்லனும் நீங்கதான்னு சொன்னார். நான் இந்தப் படத்தோட கதை பிடிக்கலைன்னு கூறி தப்பிச்சிடலாம்னு நினைச்சேன்.
  
ஆனால் அவர் சொன்ன கதை அற்புதமாக இருந்தது. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். நடிச்சேன். இருபது ஆண்டுகள் கழித்து இப்போது இந்தப் படத்தோட இரண்டாம் பாகம். மிக அருமையான அரசியல் படமாக வந்திருக்கிறது
அமைதிப்படை
2. அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்றில்லாமல், இன்றைய அரசியலைப் பேசுகிறது படம்.
  
வில்லனா நடிக்கிறது பத்தி கவலைப்படல. ஆனால் அதுக்காக சும்மா ஹீரோகிட்ட அடிவாங்கிட்டு போற மாதிரி சப்பையான வேடங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. இவங்க ஹீரோவாகிறதுக்கு நாம அடிவாங்கணுமா? இந்தப் படத்துலகூட,  'இவங்க ட்ரம்ஸ் வாசிக்க எங்க பம்ஸ்தான் கிடைச்சுதா'-ன்னு ஒரு வசனம் வச்சிருக்காங்க.
  
வில்லனா நடிக்கணும்னா, அந்தப் பாத்திரம் அதிகபட்ச வீச்சோட இருக்கணும். எனக்குத் தெரிஞ்சு, இந்த சினிமாவுல பிரமாதமான வில்லன் வேடம் அமைதிப்படை அமாவாசைதான். அதை முறியடிக்கிற மாதிரி இன்னொரு வில்லன் வேடத்தை     மணிவண்ணன் தவிர யாராலும் உருவாக்க முடியாதுன்னு நான் அடிச்சி சொல்றேன். அப்படி யாராவது உருவாக்கினால், நிச்சயம் நான் அதில் நடிப்பேன்," என்றார்.

பாரதிராஜாவுக்கு அவரைத் தவிர யாருமே இயக்குநர் இல்லேன்னு நினைப்பு ! - டைரக்டர் மணிவண்ணன் தாக்கு



மிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிப்பட இயக்குநராக, சிறந்த நடிகராக திகழ்பவர் மணிவண்ணன். 1994-ல் அவர் இயக்கிய அமைதிப்படை பிரமாண்ட வெற்றிப் படமாகவும், அரசியல் எள்ளலுக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகவும் திகழ்கிறது.
   இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை 'நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ'  என்ற தலைப்பில் இயக்கி வருகிறார். இயக்குநராக இது அவருக்கு 50 வது படம்.
    இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா  சமீபத்தில் நடந்தது.
மணிவண்ணன் பேசியதாவது:
   "நானெல்லாம் இயக்குநராவேன்னு எங்க டைரக்டர் பாரதிராஜா நம்பவே இல்ல. ஏன்னா அவருக்கு அவரைத் தவிர யாருமே இயக்குநர் இல்லேன்னு நினைப்பு. இதுல அவர் எங்கே எனக்கு வாய்ப்புக்கு சிபாரிசு செய்யப் போகிறார்...
அப்போல்லாம், பாரதிராஜா படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கும்போது, அவருக்கு பாடலுக்கான சூழ்நிலையை சொல்வது, பாடல் வரிகளை எழுதி வாங்குவது என அத்தனை வேலைகளையும் நான்தான் செய்து வந்தேன். ஒரு முறை அவர்தான் என்னை தயாரிப்பாளர் கலைமணிக்கு அறிமுகப்படுத்தி, நம்ம பையன்தான். நல்ல திறமை இருக்கு. ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்லி 'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தை இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இளையராஜாவாலதான் நான் இயக்குநரானேன்.
     ஆனா இன்னிக்கு அந்த இசைஞானியை இந்தப் படத்துல பயன்படுத்த முடியல. காரணம் பட்ஜெட். இந்தப் படத்து பட்ஜெட் அதுக்கு இடம் கொடுக்கல. ஜேம்ஸ் வசந்தனைப் பயன்படுத்தியிருக்கேன்.
          'அமைதிப் படை 2-ம் பாகம் 'அரசியல் படம் என்று சொல்கிறார்கள். ஆமா.. இது அரசியல்படம்தான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், ஆனால் சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான்.
    ஒரு ஆசியரைப் பற்றி படமெடுத்தால் பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களைப் பற்றி சொல்வது போல,  ஒரு விவசாயியைப் பற்றிய படத்தில் விவசாயம், விவசாயி நிலையைச் சொல்வதுபோலத்தான் இதுவும்.
   அமைதிப்படை முதல் பாகம் எடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளோம். இந்த 20 ஆண்டுகளில் சத்யராஜ் முகத்திலும், நடையிலும் ஏற்பட்டுள்ள அனைத்து மாறுதல்களும் இரண்டு பேருக்குதான் நன்றாகத் தெரியும். ஒன்று அவர் துணைவியாருக்கு. இன்னொன்று எனக்கு!

     நாங்கள் இருவருமே கணவன் - மனைவி மாதிரிதான். படப்பிடிப்பின்போது, அவர் நடித்துக் கொண்டிருப்பார். நான் கட் சொல்ல மறந்து அவர் நடிப்பையே ரசித்துக் கொண்டிருப்பேன். அவரே, 'தலைவரே.. கட் சொல்லுங்க' என்பார்.
     அரசியலையும் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதால் அச்சுறுத்தல் வருமே என்றெல்லாம் நான் பயப்படவில்லை. காரணம் இழப்பதற்கு எதுவுமில்லை, உயிரைத் தவிர. என்ன போயும் போயும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் மூலம் அது போகுமே என்ற வருத்தம்தானே தவிர வேறொன்றுமில்லை.
    அப்படி எனக்கு என்ன நேர்ந்தாலும், என் உடலை புலிக்கொடி போர்த்தி எடுத்துச் செல்லுமாறு என் தம்பி சீமானை கேட்டுக் கொள்கிறேன்." என்றார்.

        புலிக்கொடி போர்த்தி உடலை எடுத்திட்டு போகணும்னு   இதற்கு முன்பு  இரு            விழாக்களில் சொல்லியிருக்கிறார் மணிவண்ணன்.

Tuesday, April 2, 2013

ஒரு பாடலுக்கு நயன்தாராவுடன் ஆட்டம் போட்ட தனுஷ்


னுஷ் - ஸ்ருதிஹாசன்நடிப்பில் , ஐஸ்வர்யா ஆர். தனுஷ் இயக்கிய' 3' வெற்றிப்படத்தைத் தொடர்ந்து 'வுண்டர்பார் பிலிம்ஸ் 'பட நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் மிக பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கும் படம் 'எதிர்நீச்சல்'.
  'மெரீனா', 'மனம் கொத்திப் பறவை',மற்றும் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து, முன்னணி நகைச்சுவை கதாநாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
  பிரியா ஆனந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
'அட்டகத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்த நந்திதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
உலகப்புகழ்பெற்ற ஒய் திஸ் கொலவெறிடி பாடல் புகழ் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
நடிகர் தனுஷ், தாமரை, கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர்.
தான் நடிக்காத, வேறு கதாநாயகன் நடிக்கும் படத்துக்கு தனுஷ் பாடல் எழுதுவது இதுவே முதல்முறை.
அதோடு நடிகை நயன்தாரா உடன் ஒரு பாடல் காட்சியில்  நடித்திருக்கிறார் தனுஷ்.
'ஆடுகளம்', 'எங்கேயும் எப்போதும்', '3' உட்பட பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.வேல்ராஜ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
தேசியவிருது பெற்ற கிஷோர். டி.இ. இப்படத்தின் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
'பருத்தி வீரன்', 'ஆடுகளம்', 'ஓகே ஓகே' படங்களின் கலை இயக்குநரான ஜாக்சனிடம் உதவியாளராகப் பணிபுரிந்து துரைராஜ் இப்படத்தின் மூலம் கலை இயக்குநராக அறிமுகமாகிறார்.
பாலுமகேந்திரா, வெற்றிமாறன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்த ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார்.
எதிர்நீச்சல்  -  ம் மாதம் திரைக்கு வருகிறது.


Tuesday, March 19, 2013

தனி ஈழம் கோரி சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!

இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம், இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, கச்சத்தீவை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உண்ணாவிரதம் நடத்தினர். 

இலங்கைப் பிரச்சினையில் தமிழருக்கு ஆதரவான போராட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாணவர்கள் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இப்போது மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. இப்போது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களும் கைகோர்த்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் என் ரவி தலைமையில் சோளிங்கர் நகரில் மார்ச் 19-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.  
 
இந்தப் போராட்டத்தில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் அதிமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். 

ரஜினி ரசிகர் மன்றத்தின் சோளிங்கர் ஒன்றிய பொறுப்பாளர் கோவன், மார்லின், பாண்டியன், நடராஜன், வெங்கடேசன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

அதிமுக தலைமை கழக பேச்சாளர் சோமு மணி, திமுக வேலூர் மாவட்ட துணைச் செயலர் அசோகன், வேலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலர் ரத்தின சுகுமார், பாஜக மாவட்ட துணை சுந்தரம், பாமக வக்கீல் சக்கரவர்த்தி, கவுன்சிலர்கள் ஏழுமலை, சேகர் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தை வாழ்த்தி பேசினர்.