Thursday, December 22, 2011

நடிகரானார் எடிட்டர் சுரேஷ் அர்ஸ்

யக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா','தளபதி','பம்பாய்','இருவர்',இயக்குனர் பாலா இயக்கிய 'சேது','பிதாமகன்'மற்றும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்','அமர்க்களம்','ந்திரமுகி' என 500 க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் சுரேஷ் அர்ஸ்.இன்றும் பல படங்களுக்கு பணியாற்றி வருபவர்.இரண்டுமுறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.இவரை தற்போது நடிகராக 'மகான் கணக்கு' படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் டைரக்டர் சம்பத் ஆறுமுகம்.
இப்படத்தின் கதையின் திருப்புமுனையான கதாபாத்திரத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளி செயலாக்க அதிகாரியாக நடித்துள்ளார்
முன்பு சில முன்னணி இயக்குனர்கள் நடிக்க வைக்க முயற்சித்தபோது கூட மறுத்து வந்த சுரேஷ் அர்சை புது இயக்குனரால் எப்படி நடிக்க வைக்க முடிந்தது? டைரக்டர் சம்பத் ஆறுமுகத்திடம் கேட்டோம்.
"மகான் கணக்கு' படத்தின் காட்சிகளை ரசித்து அவர் எடிட் செய்யும் போதே நான் அவர் வேலை செய்யும் பாங்கை ரசிக்க தொடங்கிவிட்டேன்.கம்ப்யூட்டர் முன்பு அவர் அமர்ந்து எடிட் செய்வதை பார்த்தபோது அந்த கேரக்டரில் ஏன் இவரை நடிக்க வைக்க கூடாது என்று தோன்றியது.ஏன் எண்ணத்தை  அவரிடம் சொன்னேன்.
‘எனக்கு நடிக்கிறத வெட்டத் தான் தெரியும்.நடிக்க தெரியாது’ என்றார்.இந்த கதாபாத்திரம் நடிக்கக் கூடாது.அதனால் நடிக்க வேண்டாம் .இயல்பா பண்ணினால் போதும்.நீங்க தான் பண்ணனும் என்று அவரை அன்பு தொல்லை செய்துசம்மதிக்க வைத்து விட்டேன்.அவர் இயல்பாக செய்ததை படமாக்கினேன்.காட்சியும் நன்றாக வந்தது.இந்த படத்தில் அவர் நடிச்ச சீனை பார்த்துட்டு மலையாளப் படமொன்றிலும் அவரை நடிக்க வைத்துவிட்டனர்.
அவரைப் போலவே உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கார்த்திக் என்பவரையும் படத்தில் வழக்கறிஞராக நடிக்க வைத்திருக்கிறேன்.படத்தில் இடம் பெறும் கோர்ட் சீன ஒன்றிற்காக வசனம் எழுதும்போது காட்சி விவாதத்திற்காக அவரை ஆபிஸ்க்கு அழைத்திருந்தேன்.
ரமணா சார்பாக வாதிடும் வழக்கறிஞரின் வசனங்களை நான் பேசி நடிக்க பதிலுக்கு பேங்க் தரப்பில் நீங்கள் வாதாடினால் என்ன பேசுவீர்களோ அதை பேசுங்கள் என சொல்லி ரெகார்ட் பண்ணினேன். அவருடைய வாதத்திற்கேற்ப நானும்   பேசி நடித்தேன்.அவர் கோர்ட்டில் வாதிடுவதை போல் இயல்பாக இருந்ததை பார்த்து அந்த கேரக்டரில் நீங்களே நடியுங்கள் என சொல்லி அவரை நடிக்க வைத்தேன்.
ரமணா தரப்பு வழக்கறிஞராக 'நீதியின்குரல்' புகழ் சி.ஆர்.பாஸ்கரனை நடிக்க வைத்துள்ளேன்.இந்த கிளைமாக்ஸ் கோர்ட் சீன் நிச்சயம் பரபரப்பாக பேசப்படும்" என்றார் இயக்குனர் சம்பத் ஆறுமுகம்.
இந்த படத்தின் நாயகன் ரமணா எம்.பி.ஏ.ஸ்டூடண்டாக நடித்துள்ளார்.நாயகியாக மும்பை மாடல் ரீச்சா சின்ஹா அறிமுகமாகிறார்.ரமணாவின் அக்காவாக தேவதர்ஷினி நடித்துள்ளார்.முக்கிய கதாபாத்திரத்தில் டைரக்டர் சரவண சுப்பையா நடித்துள்ளார்.இவர்களுடன் ஸ்ரீநாத் ,மனோபாலா,லொள்ளு சபா ஜீவா முத்துக்காளை,சூர்யா.பி.சக்திவேல்,ஷர்மிளா,பேபி ரீத்திகா,ஐசக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.கே.ரிஷால்சாய் இசையமைத்துள்ளார்.நா.முத்துக்குமார் ,சீர்காழி சிற்பி பாடல்களை எழுதுயுள்ளனர்.பூஜா பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஜி.பி.எஸ்.தயாரித்துள்ளார்.கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் சம்பத் ஆறுமுகம்.'மகான் கணக்கு' இம்மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.
              

Wednesday, November 30, 2011

'காந்தல் பூக்கும் தீவிலே'

லங்கை வவுனியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனும், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினும் இணைந்து 'காந்தல் பூக்கும் தீவிலே' என்ற இசை ஆல்பத்தை உருவாகியுள்ளனர்.இலங்கையை சேர்ந்த இந்த இரு  கலைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும்  புதிய பாடல் இணையத்தளங்களின் இப்பொழுது மிகவும் பிரபல்யம் பெற்றிருக்கின்றது.பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இலங்கையில் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார். இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இலங்கை சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசராக தேர்வு  செய்யப்பட்டவராவார்.விரைவில் இவர் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைக்க திட்டமிட்டுள்ளாராம்.

Monday, November 21, 2011

மிஷ்கின் படத்தில் பழம் பெரும் நடிகர் நாகேஸ்வரராவ்

 மிஷ்கின் இயக்கும் 'முகமூடி' படத்தில் பழம் பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார்.
     இவரைத் தவிர, முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.யுடிவி தயாரிப்பில், ஜீவா - பூஜா ஹெக்டே நடிக்கும் இப் படத்தில் முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார் நரேன்.
           இப்போது இந்தப் படத்தில் தெலுங்கின் சாதனை நடிகர் நாகேஸ்வரராவ் முக்கிய வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த தகவலை படத்தின் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்..
    கே இசையமைக்கும் இந்தப் படம் வரும் நவம்பர் 30ம் தேதி படப்பிடிப்புடன் தொடங்குகிறது.

Saturday, November 19, 2011

பின்னணி பாடகர் ஜேசுதாசின் சாதனை

னது இனிமையான குரலால் உலக மக்களையும் கவர்ந்திழுத்த பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ்,  இசைத் துறையில் தனது பொன்விழா ஆண்டில் கால்பதித்துள்ளார். இதுவரை தனது தாய்மொழியான மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 50,000 பாடல்களுக்கும் மேலாக பாடி ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ஜேசுதாஸ். பல ஆண்டுகளுக்கு முன்பு இவர் பாடிய நீயும் பொம்மை, நானும் பொம்மை, நினைச்சுப் பார்த்தால் எல்லாம் பொம்மை என்ற பாடலை இன்றும் கூட கேட்டு மகிழலாம். 1961 ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதியன்று அவர் தனது முதல் திரைப்படப் பாடலை பாடினார். அப்போது அவர் வெறும் நான்கு வரிகள்தான் பாடினாராம். தற்போது அவருக்கு வயது 71. தனது இனிமையான, மென்மையான குரலால் தமிழ், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர் ஜேசுதாஸ். 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மன்னன்' திரைப்படத்தில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே! என்று இவர் பாடிய பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. தாயின் பெருமையை பறைசாற்றக் கூடிய இந்தப் பாடலை திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலில் இன்றைக்கும் பக்தர்கள் கேட்கலாம். கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில்  நடை சாத்தப்படும் போது ஹரிவராசனம் என்று இவர் பாடிய பாடலைத்தான் இன்றைக்கும் ஒலிபரப்புகிறார்கள்.
இந்தப் பாடலை கேட்டதும் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் ஓடுவார்கள். இந்தப் பாடல் முடிந்ததும் கோயில் நடை சாத்தப்பட்டு விடும். அப்படிப்பட்ட சிறப்பை பெற்றவர்தான் பின்னணி பாடகர் ஜேசுதாஸ். மலையாளத்தைத் தவிர தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, ஒடியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு போன்ற மொழிகளிலும் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் கூட நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியவர்தான் பாடகர் ஜேசுதாஸ். பாடல்களைப் பாடும் போது அர்ப்பணத்தோடு பாடக் கூடியவர் ஜேசுதாஸ். கடின உழைப்பாளியும் கூட. 3 தலைமுறை பின்னணி பாடகிகளுடன் இவர் இணைந்து பாடியிருக்கிறார்.
குறிப்பாக, பி. சுசீலா, எஸ். ஜானகி, பி. லீலா, வாணிஜெயராம், இன்றைய சித்ரா, சுஜாதா போன்ற அனைத்து பாடகிகளுடனும் இணைந்து பாடி பல மென்மையான பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கியவர்தான் ஜேசுதாஸ் என்றால் அது மிகையாகாது.

Friday, November 18, 2011

சிரிக்க வைக்க போகிறார் ஸ்ரீகாந்த்

சேரன், அமீர், ராதா மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் முகமது அஸ்லம். இவர் 'பாகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.தனது முதல் படத்திலேயே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கிறார் முதன்முதலாக ஸ்ரீகாந்த் நகைச்சுவை நாயகனாக இதில் நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக ஜனனிஅய்யர் நடிக்கிறார்.
       'பாகன்' படம் குறித்து இயக்குனர்  கூறுகையில், "காமெடி கலந்த ஜனரஞ்சகப் படம் பாகன். காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட்,   காமெடி என பக்கா பொழுதுபோக்குப் படம் இது. . காட்சிக்குக் காட்சி காமெடியில் ஸ்ரீகாந்த் அசத்தியிருக்கிறார்.. அவருக்குள் இத்தனை பெரிய நகைச்சுவை கலைஞர் ஒளிந்திருந்தாரா என எல்லாருமே கேட்கும் அளவுக்கு காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. ரஜினி சாருக்கு ஒரு தில்லுமுல்லு மாதிரி, ஸ்ரீகாந்துக்கு இந்தப் பாகன் அமையும்," என்றவரிடம் படத்தின் கதை குறித்து கேட்டோம்.
      "உருவத்தில் பெரிய யானையை சிறிய உருவம் கொண்ட பாகன் அடக்கி ஆள்கிறான். அதுபோல பிரச்சினைகள் நிறைந்த இந்த பெரிய வாழ்க்கையை சமாளித்து வாழ்பவனே ஹீரோ. வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிமாநிலம், வெளிநாடு செல்லுவோர் மத்தியில், வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடு செல்லாமல் தன் சொந்த மண்ணில் உழைத்து முன்னேறுகிறான் இந்த பாகன். இந்த மண்ணின் மீது அவ்வளவு காதல்.
   என் படத்தில் என் குருநாதர்கள் சேரன், அமீர், ராதா மோகன் பாதிப்பு இருக்கும். காரணம், அவர்களைப் பிடித்துப் போய், அவர் படங்களை ரசித்து அவர்களுடன் பணியாற்றியவன் நான். அதனால் என் படைப்பிலும் அவர்களின் பாதிப்பு இருக்கும். அது தவறும் அல்ல," என்றார் முகமது அஸ்லம்.
. ஸ்ரீகாந்தின் அம்மாவாக கோவை சரளாவும், அப்பாவாக ஜார்ஜும், நண்பர்களாக  சூரி, அங்காடித் தெரு பாண்டியும் நடிக்கின்றனர்.
ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம் படங்களில் பணியாற்றிய லஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆன்டனியின் உதவியாளர் கெவின் இந்தப் படம் மூலம் எடிட்டராக அறிமுகமாகிறார்.
மும்பையின் லோனாவாலா, பொள்ளாச்சி மற்றும் வெளிநாடுகளில் படமாகிறது பாகன்.

'காந்திகணக்கு' படத் தலைப்புக்கு தணிக்கை குழு எதிர்ப்பு..!

 'பூஜா பிலிம் இன்டர்நேஷனல்' எனும் படநிறுவனம்  தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'காந்தி கணக்கு'.இப்படத்தில் ரமணா கதாநாயகனாகவும்,ரீச்சா சின்ஹா கதாநாயகியாகவும்  நடித்துள்ளனர்.இவர்களுடன் மனோபாலா,சரவண சுப்பையா, ஸ்ரீநாத்,தேவதர்ஷினி,'லொள்ளுசபா
' ஜீவா,ஐசக்,முத்துக்காளை,சூர்யா பி.சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.கே.ரிஷால்சாய் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பை சுரேஷ் அர்ஸ் கவனித்துள்ளார்.கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சம்பத் ஆறுமுகம்.( இயக்குனர் சசியின் உதவியாளர்).ஜி.பி.எஸ்.தயாரித்துள்ளார்.
             படம் திரையிடுவதற்கு தயாராக உள்ள நிலையில் படத்தின் தலைப்புக்கு தணிக்கை குழு அதிகாரிகள் அனுமதி அளிக்காததால் படத்தின் தலைப்பு 'மகான் கணக்கு 'என மாற்றப்பட்டுள்ளது.இது பற்றி இயக்குனர் சம்பத் ஆறுமுகம் கூறியதாவது:
      "காந்தி கணக்கு' படப் பெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யும் போது படத்தின் கதையையும்,தலைப்பிற்கான விளக்கத்தையும் சொன்னபோது அதை ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்தார்கள்.
       தற்போது பட வேலைகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.தணிக்கைக்கு அனுப்பியபோது தலைப்பை மாற்றிவிட்டு வந்தால் தான் படமே பார்ப்போம் என தணிக்கை குழு அதிகாரிகள் சொன்னார்கள்.முதலில் படத்தை பாருங்கள்.பார்த்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் என்று தலைப்பு வைத்ததற்கான விளக்கத்தையும் சொன்னோம்.அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.அத்துடன் முதலில் படத்தோட தலைப்புக்கே சென்சார் தான் அதை மாற்றி விடுங்கள் என விடாப்பிடியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
   'நேர்மையற்ற எந்த ஒரு வியாபாரமும் வன்முறைக்கு வித்திடும்' இதுதான் காந்தியோட கணக்கு.இதைத் தான் படத்தில் சொல்லியிருக்கிறோம்.உலகம் முழுவதும் காந்தியோட கணக்கு அகிம்சை கணக்கு என்பது தெரியும்.தமிழ் நாட்டில் மட்டும் காந்தி கணக்கு என்றால் வராத கணக்கு என்று தப்பான அர்த்தமாக எடுத்துக்கிறாங்க.
   சுதந்திரத்திற்காக போராடினார் காந்தி.'காந்தி கணக்கு' என்கிற வார்த்தைக்கு இருக்கிற தப்பான அர்த்தத்தை மாற்றுவதற்கு எனக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.இது எனக்கு வருத்தத்தை தந்தாலும் படம் திரைக்கு வர தாமதமாக கூடாது என்ற எண்ணத்திலும்,தலைப்பு மாறினாலும் சொல்லப்பட்டுள்ள கருத்து நிச்சயம் மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கையிலும் தலைப்பை மாற்ற சம்மதித்தோம்.
நம்ம நாட்டுல எவ்வளவோ மகான்கள் வாழ்ந்திருக்காங்க.வாழ்ந்திட்டு இருக்காங்க.காந்தியும் ஒரு மகான் தான். அதனால் தான் 'காந்தி கணக்கு 'படப் பெயரை மகான் கணக்கு என்று மாற்றியுள்ளோம்.
   படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், ''எந்தவித ஆபாச,வன்முறை காட்சிகள் இல்லாமல் சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான படம் இது.நீங்க பண்ற படங்கள் எல்லாம் இந்த மாதிரி சமூக அக்கறையுள்ள படமாக அமையுட்டும்ன்னு வாழ்த்துறோம்." என மனம் திறந்து பாராட்டினார்கள்.படத்திற்கு ' U ' சான்றிதல் வழங்கியுள்ளனர். 'மகான் கணக்கு' படத்தை திரையிடுவதற்கான முயற்சியில் உள்ளோம்." என்றார் இயக்குனர் சம்பத் ஆறுமுகம்.

Saturday, October 22, 2011

தமிழைக் கடித்துத் துப்பும் பாடகருக்கு ஹீரோக்கள் ஆதரவு.!

தமிழில் ஹிட்டான பெரும்பாலான பாடல்களை பாடியிருப்பவர் ஸ்ரேயா கோஷல். லேட்டஸாக இவர் பாடி ஹிட்டான பாடல் 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் இடம் பெற்ற 'மன்னிப்பாயா..அதேபோல தமிழில்  ஹிட்டான பல பாடல்களை பாடியவர் உதித் நாராயாணன்.இந்த இருவரும் வடநாட்டை சேர்ந்தவர்கள்.
ஸ்ரேயாகோஷலின் குரல் மட்டுமல்ல,அவர் உச்சரிக்கும் குரலும் அழகு தான்.ஒரு தமிழ் பெண் பாடியது போலவே அவ்வளவு அழகாக தமிழை உச்சரித்துபாடுகிறார்.ஆனால் இந்த உதித் நாராயணன் தமிழைக் கடித்து துப்பி தான் பாடுவார்.தமிழ்ப் பாடலை அவரை பாட வைத்து தமிழ்க் கொலை செய்த பெருமை அவருக்கு மட்டுமல்ல, நம் இயக்குநர்களுக்கும், ஹீரோக்களுக்கும் உண்டு.இதில் குறிப்பாக ஹீரோக்கள் தான் அவரை சிபாரிசு செய்கிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.இந்த நிலை வேறு எந்த மொழி சினிமாவிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.  

        

Wednesday, October 19, 2011

ஊர் பெயரில் உருவாகி வரும் படங்கள்

'திருத்தணி' ,
'தேனிமாவட்டம்' ,
'விருதுநகர் சந்திப்பு', 
'நெல்லை சந்திப்பு',
'நெல்லை பட்டணம்',
'பாளையங்கோட்டை', 
'வேலூர் மாவட்டம்',
'கோயம்பேடு பேரூந்து நிலையம்',
'திருமங்கலம் பேரூந்து நிலையம்',
'கமுதியில் ஒரு காதல்',
'வருசநாடு',
'தலக்கோணம்', 
'பழைய வண்ணாரப்பேட்டை'

பார்த்து ரசியுங்கள்..கமெண்ட் உங்களது...


Thursday, October 13, 2011

நன்றி மறந்த நடிகை..சாடிய இயக்குனர்.!

மீபத்தில் நடந்த 'வித்தகன்' ஆடியோ பங்க்ஷனுக்கு வந்திருந்த நடிகைகளில் தன்ஷிகாவும் ஒருவர். தன்ஷிகானா யாருன்னு கேட்க தோணுதா? ஆனா அம்மணியோ தன்னை உலகம் அறிஞ்ச சூப்பர் நடிகைன்னு நினைச்சிகிட்டு இருக்கு போல..பங்க்ஷன்ல அவரை பேச கூப்பிட்டதும் மைக் முன்னாடி வந்ததவர் ,எப்படி இருக்கீங்க.....? என்று ஆடியன்ச பார்த்து கேட்க எந்த ரியாக்ஷனும் இல்லை. மூக்குடைந்தது தான் மிச்சம்.பின் சமாளித்துக் கொண்டு பேசினார்.'அரவான் 'பட டைரக்டர் வசந்தபாலனுக்கு நன்றி கூறினார்.எங்கு வந்து எதை பேசுவது என்று தெரியாத  மக்குவாக நடந்து கொண்டார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரு .பழனியப்பன் ,"தன்ஷிகாவை 'பேராண்மை' யில் அறிமுகப்படுத்தியவர் ஜனநாதன் சார்.அவர மறந்துட்டாங்க.அவருக்குதான் மொதல்ல நன்றி சொல்லணும்.ஆனா 'அரவான்' ல நடிச்சிட்டு வர்றதால வசந்தபாலனுக்கு நன்றி சொல்றாங்க. இப்படி நன்றி மறக்கிறதால தான் டைரக்டர்களெல்லாம் நடிகன் ஆகிடுறாங்க." என்றார். தன்ஷிகாவுக்கு இதை கேட்டதும் முகம் இறுகிப் போனது. பின் எழுந்து போய் டைரக்டர் ஜனநாதனுக்கு கை கொடுத்து ஸாரி கேட்டார்.
கரு .பழனியப்பன் அண்ணே ,,உண்மையிலேயே தன்ஷிகா முதல்ல அறிமுகப்படுத்திய டைரக்டருக்கு நன்றி சொல்லியிருக்கணும் என்றால்..அவர் 'மறந்தேன் மெய் மறந்தேன்' பட டைரக்டருக்கு தான் நன்றி சொல்லணும்.ஆம்,அதுதான் அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம்.மற்றொரு நாயகியாக நடித்தவர் கல்யாணி [பூர்ணிதா} இந்த படத்தில் தன்ஷிகா மனநலம் சரியில்லாதவராக நடித்திருந்தார்.அதனால மறந்துவிட்டாரோ என்னவோ..
 தன்ஷிகாவைப் பற்றி மற்றொரு தகவல் ...அவரது முந்தைய பெயர் மரினா.அந்த பெயரில் துக்கடா கேரக்டரில் சில படங்களில் நடித்துள்ளார்.

Friday, October 7, 2011

வில்லன் ஆனார் லியாகத் அலிகான்

'பூந்தோட்ட காவல்காரன்' ,'புலன் விசாரணை','கேப்டன் பிரபாகரன்',உட்பட 35 படங்களுக்கு வசனம்,திரைக்கதை வசனம் எழுதியதுடன் 'ஏழைஜாதி', 'பாட்டுக்கொரு தலைவன்','எங்கமுதலாளி' உட்பட 5 படங்களை இயக்கியும் இருப்பவர் லியாகத் அலிகான் .இவர் தற்போது 'ஊராட்சி ஒன்றியம்' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில்  ஸ்ரீதர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தேனிமாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப் பெண் தமலி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இவர்களுடன் ஆர்.சுந்தராஜன்,கஞ்சா கருப்பு,'நான் கடவுள்' ராஜேந்திரன்,சாதனா,லாவண்யா,திண்
டுக்கல் ஜெயபால்,செல்லத்துரை மற்றும் பலர் நடிக்கின்றனர்.கலெக்டர் கேரக்டரில் முன்னணி நடிகை ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார்.
எஸ்.சுரேஷ் DFT ஒளிப்பதிவு செய்கிறார்.எஸ்.ஆர்.பிரசாத் இசையமைக்கிறார்.பாடல்களை கலைக்குமார் எழுதுகிறார்.படத்தொகுப்பை சுரேஷ்.எம்.கோட்டீஸ்வரன் கவனிக்கிறார்.கலை-மோகன் ராஜேந்திரன் ,நடனம்-சாகுல்,சுபாஷ்.'ராஹிட் ஸ்டூடியோஸ்' பட நிறுவனம் சார்பில் கோவை.பி.தண்டபாணி ,எஸ்.பி.ராஜா இணைந்து தயாரிக்கின்றனர்.
கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் கே.எம்.கிருஷ்ணமூர்த்தி.
படத்தைப் பற்றி இயக்குனர் கே.எம்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது; "இந்தியாவின் உயிர்நாடி எங்கே இருக்கிறது என்ற போது அது கிராமங்களில் இருக்கிறது 'என்று பதிலளித்தார் காந்தி.'கிராமங்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி கிராமங்களை வைத்தே மதிப்பிடமுடியும்' என்று காந்தி கடைசிவரை வலியுறுத்தி வந்தார்.
நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்கள் சரியாக இருந்தால் தான் நாடு தலை நிமிர்ந்து நிற்க முடியும்.ஆனால் இன்றைய நிலை என்ன..? கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.கிராம மக்களிடம் விழிப்புணர்ச்சி இல்லை.
அரசு போடும் திட்டங்கள் கடைக்கோடியில் இருக்கும் கிராமங்களை சென்றடைய வேண்டும். அதற்கு அந்த ஊராட்சி சரியாக செயல்பட வேண்டும்.
ஊராட்சி மன்றத்துக்கும் ஊராட்சி ஒன்றியத்துக்கும் உள்ள வேறுபாடு கூட நம்மில் பலருக்கு தெரிவதில்லை.இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார்கள்.ஆனால் அதை செயல்படுத்த நினைப்பதில்லை.
இந்த கருத்தை செய்தியாக சொல்லாமல் புதுக்கோட்டையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் ஜனரஞ்சகமான கதையோடு சொல்லியிருக்கிறேன். கிராமத்து மக்களின் விழிப்புணர்ச்சியை  வலியுறுத்துகிற இக்கதையில் ஒரு சாதாரண கிராமத்து இளைஞன், ஊராட்சி நிலையில் உள்ள சிற்றுரை ஊராட்சி ஒன்றிய நிலைக்கு எப்படி மாற்றி உயர்த்துகிறான் என்பதை காதல், சென்டிமெண்ட்,நகைச்சுவை என சுவாரஸ்யம் கலந்து உருவாக்கியிருக்கிறேன் .
சென்னை,திண்டுக்கல்,கொடைக்கானல்
,புதுக்கோட்டை ஆகிய இடங்களில் 90 சதவீத படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது." என்றார்.

கிணற்றில் விழுந்த நடிகர் காப்பாற்றிய ஊர்மக்கள்

சீமான் கதையின் நாயகனாகவும், முரளி, ஐஸ்வர்யா தேவன் என்ற கேரளா புதுவரவும் நடிக்கும் படம் "கண்டுபிடி கண்டுபிடி". மூவி பஜார் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
 
போலீஸ் விசாரணையை மையப்படுத்தி நகரும் பரபரப்பான படமாக வளர்ந்து வரும் இப்படத்தின்  படப்பிடிப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகில் நடந்தது.  'குங்குமப்பூவும் கொஞ்சுபுறா'வும் படத்தின் இணை நாயகனாக நடித்த தருண் சத்ரியா இப்படத்தில் முக்கிய வேடமேற்று நடிக்கிறார். 

காட்சிப்படி தருண் நூறு அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி படிக்கட்டில் உக்கார்ந்திருப்பதுபோல ஒரு காட்சியை படமாக்கத் திட்டமிட்டார்கள். இதற்காக பல்வேறு பகுதிகளில் ஆழமான கிணறுகளை தேடி இறுதியாக கொஞ்சம் பழமையான கிணறொன்றை கண்டுபிடித்து படப்பிடிப்பை நடத்தினார்கள். 

நடிகர் தருண் சத்ரியா படிக்கட்டு வழியாக இறங்கியபோது அங்கிருந்த பாசி வழுக்கி பிடிமானம் இல்லாமல் கிணற்றோரமாகவே தவறி விழுந்தார். தலையில் அடிபட்டவர் மயக்க நிலைக்கு செல்ல, அந்த ஊரைச் சேர்ந்த ரெண்டு பேர் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து அவரை மீட்டு கரை சேர்த்தனர். 

அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர் படக்குழுவினர். இயல்புக்கு திரும்பிய தருண் மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி நடித்துமுடித்தபோது ஒட்டுமொத்த படக்குழுவே அவருக்கு கைத்தட்டி உற்சாகமளித்தது..
                                                       

Saturday, July 30, 2011

இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜா தான்!! -இயக்குனர் பி.வாசு

பி.வாசு இயக்கத்தில் ஆர்.கே நாயகனாக நடிக்கும் புலிவேஷம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா ஆடிடோரியத்தில் நடைபெற்றது.ரசிகர்கள் முன்னலையில் கலைநிகழ்ச்சிகளோடு கோலகலமாக நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் பி.வாசு பாடல் சிடியை வெளியிட புகழ்பெற்ற சர்வதேச ஸ்குவாஷ் விராங்கனை ஜோஸ்னா சின்னப்பா பெற்று கொண்டார்.

இசையமைப்பாளர் , ஸ்ரீ காந்த் தேவா,நாயகி சதா,மற்றொரு நாயகி திவ்யா பத்மினி,இயக்குனர் வாசுவின் மகன் இளம் நடிகர் ஷ‌க்தி,நடிகர் எம் எஸ் பாஸ்கர்,தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்
                .

விழாவில் இயக்குனர் பி.வாசு  கூறியதாவது;
ஒரு படத்திற்கு வியாபாரமும் முகவும் அவசியம் .நாயகன் ஆர்.கே மிகவும் புத்திசாலித்தனமாக இந்த இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்.

வேலை கிடைச்சிடுச்சி படத்திற்கு பிறகு மிகவும் வித்தியாசமான திரைக்கதையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.நாயகன் ஆர்.கே கதைக்கேற்றெ வகையில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.கார்த்திக் மிகவும் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.நான் அறிமுகம் செய்த‌ மன்சூர் அலிகான் நீண்ட இடைவெளிக்கி பிறகு என படத்தில் நடித்துள்ளார்.

இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜா தான்.அந்த படத்தில்  ஸ்ரீ காந்த் தேவா இளையாராஜாவுக்கு நிகராக ஒரு மெலடி பாட்டு போட்டிருக்கிறார்.சின்னதம்பி போவோமா ஊர்கோலம் போல இந்த பாட்டு ஹிட்டாகும்.என மற்ற படங்க‌ளை போலவே எல்லா வகையான பாடல்களும் இதில் இருக்கிற‌து.

இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, July 28, 2011

சமஸ்கிருதம் கலக்காத பெயர்களுக்கு தான் வரி விலக்கு-தங்கர் பச்சான் கோரிக்கை

 யக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சினிமா என்னும் திரைப்படக்கலையின் மூலம் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், நமக்கான மரபுகலைகளையும், பழங்கலைகளையும், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வையும் அது அழித்திருக்கிறது. இன்று மக்களின் கலையாகவும், அவர்களின் வாழ்வையும் பிரதிபலிக்கிற கலையாகவும் மாறிவிட்ட திரைப்படக்கலையை மிகவும் பொறுப்புடனும், கவனமாகவும் கையாள வேண்டிய கடமை அதனை சார்ந்த உருவாக்குபவர்களுக்கு இருக்கிறது. நம் மொழியையோ, பண்பாட்டையோ, நம் மதிப்பீடுகளையோ பற்றி கவலைப்படாமல் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மக்கள் விரும்புகிறார்கள் எனச்சொல்லி திரைப்படத்தை உருவாக்குபவர்களும் சமூகத்தின் முன் குற்றவாளிகள் தான்.

தமிழ் படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் முந்தைய தமிழக அரசு தமிழில் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளித்தது. ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டோமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு புரியும்.
இதே வரிவிலக்கு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் நிபந்தனைகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
தமிழில் பெயரை சூட்டி விட்டு மொழி, பண்பாட்டு, கலாசார கூறுகளை எவ்வளவு வேண்டுமானாலும் சிதைக்கலாம், யதார்த்தம் என்கிற பெயரில் ஆபாசம், வன்முறைக்காட்சிகளை கூசாமல் காட்டி வருங்கால தலைமுறைகளையும் சீரழிக்கலாம் என்கிற போக்குக்கு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. தேவையில்லாமல் அயல் மொழிகளை புகுத்துபவர்களுக்கும், வன்முறை, ஆபாச காட்சிகளை உருவாக்கி பொழுதுபோக்கு என்கிற பெயரில் உருவாகிற திரைப்படங்களுக்கும் வரி விதிக்கப்படும், தமிழ்பண்பாடு, கலாசாரம், மொழியை போற்றுகின்ற படைப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்கிற இத்தகைய அறிவிப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத புரட்சிகரமான அறிவிப்பாகும். இது பொறுப்புள்ள கலைஞர்களும், தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
மொழி, பண்பாடு அடையாளங்களை காப்பதற்கு மேற்கொண்டுள்ள தமிழக அரசு இவை முழுமையாக நிறைவேற வேறொரு நிபந்தனையையும் விதிக்க வேண்டும். ஆங்கிலத்தில் பெயரிட்டாலும், சமஸ்கிருதத்தில் பெயரிட்டாலும் இரண்டுமே வேற்று மொழி தான். கடந்த காலங்களில் வரி
விலக்கினைப் பெற்று பலனை அனுபவித்து வெளியான படங்களில் சமஸ்கிருதம் சொற்களை கலந்து வந்தவை ஏராளம். தூய தமிழ் சொற்களுடன் சமஸ்கிருதம் கலக்காத பெயர்களை சூட்டுபவர்களுக்கு தான் வரி விலக்கு என்பதை உடனே அறிவிக்க வேண்டும். இதனை தான் தமிழ் அறிஞர்களும், தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
வரிவிலக்கு தொடர்பான நிபந்தனைகளை செயல்படுத்தும் குழுவில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இடம் பெறுவார்கள் என நம்புகிறோம்.
இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு கலைஞன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும், எனது அளவற்ற மகிழ்ச்சியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

இயக்குனர்களுக்கு லயோலாவின் கெளரவ பட்டம்

யோலா கல்லூரி முதுகலை ஊடகக்கலைகள் துறை சார்பில் "தேடல்" ஊடகப்பேரவை
தொடக்கவிழா 27.07.2011 அன்று நடைபெற்றது.

மாண்புமிகு திரு. ஜி.செந்தமிழன் அமைச்சர் (சட்டத்துறை, செய்தி மற்றும்
விளம்பரத்துறை) , இயக்குனர் பிரபு சாலமன், இயக்குனர் சீனு ராமசாமி
ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் "பண்பாட்டு இயக்குனர்" பட்டம் திரு. பிரபு சாலமனுக்கும் ,
"மக்கள் இயக்குனர்" பட்டம் திரு. சீனு ராமசாமிக்கும் வழங்கப்பட்டது.

    

நடிகருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள 'காஞ்சனா' தமிழில் கடந்த 22 ம் தேதி வெளியாகி வசூலை குவித்து வருகிறது.இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில்  கடந்த 14 ம் தேதியே வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.மிகவும் சந்தோசமடைந்த தெலுங்கு படத்தின் தயாரிப்பாளர் பெல்லகுண்டா சுரேஷ் , ராகவா லாரன்ஸ்க்கு சமீபத்தில் பி எம் டபிள்யு கார் பரிசளித்துள்ளார்.

Sunday, July 24, 2011

யார் இந்த இனியா ?

'களவாணி' படத்தையடுத்து சற்குணம் இய்க்கும் 'வாகை சூட வா'படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார் இனியா.இவர் ஏற்கனவே சுருதி என்ற பெயரில் 'பாடகசாலை' படத்தில் நாயகியாக நடித்தவர்.இதை அவர்
யாரிடமும் சொல்வதில்லை.முதல் படம் 'வாகை சூட வா' என்றே சொல்லி வருகிறார்.
                                  வாகைசூடவா படத்தில்..
                                               பாடகசாலை படத்தில்...
                                                                 பாடகசாலை 

அஜித்-விஜய் சந்திப்பு படங்கள்




இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத் ஸ்ரீகாந்த் திருமண நிச்சயதார்த்த விழாவில் அஜித்குமார்,விஜய்,சங்கீதா விஜய்,அனிருத் ஸ்ரீகாந்த்...

ஷம்முவின் மரம் ஏறும் ஆசையை நிறைவேற்றிய டைரக்டர் !


 'பாலை' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் நடந்தது.
தயாரிப்பாளர் நாகை ரவி, இயக்குனர் ம.செந்தமிழன் ஆகியோர் வரவேற்றார்கள்.
படத்தின் நாயகி ஷம்மு இந்த விழாவில் பேசியதாவது-
"பொதுவா ஒரு கதையை கேட்டவுடனே இந்த படத்தை ஏன் பண்ணக் கூடாது, ஏன் பண்ணணும் என்று இரண்டு கேள்விகள் எனக்குள் கேட்டுக் கொள்வேன். இந்த கதையை கேட்டதும் எனக்கு தோன்றியது உடனே‌ நடி‌க்‌கணும்‌ என்றுதான். 
களறி சண்டை போட வேண்டும், மரத்தில் ஏற வேண்டும் என்று சில இக்கட்டான விஷயங்களை டைரக்டர் செந்தமிழன் சொன்னாலும், எனக்கு அதெல்லாம் ரொம்ப ஜாலியாக பட்டது. அமெரிக்காவில் சாலையோரத்தில் மரங்களை பார்த்தால் அதில் ஏற வேண்டும் என்று பலமுறை நினைப்பேன். ஆனால் அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை. இந்த படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது. நான் ஆம்பிளையாக பிறந்திருந்து நடிக்க வந்திருந்தா ஆக்ஷன் ஹீரோ ஆகியிருப்பேன். அந்தளவுக்கு எனக்கு ஆக்ஷன் மேல் ஆசை உண்டு. இந்த படம் எனக்குள் இருக்கும் அந்த ஆசையை நிறைவேற்றியிருக்கு. 

வில் அம்புடன் ஒரு பைட் பண்ணியிருக்கேன், கையில் தீப்பந்தம் பிடிச்சு ஓடியிருக்கேன். ஆக்ஷன் சைட்ல இப்படின்னா, அழகான காதலும் இருக்கு எனக்கு. யாரை பார்த்தாலும் இலை தழை ஆடை விஷயத்தைதான் கேட்கிறார்கள் என்னிடம். நீங்கள் ஸ்டில்களில் பார்த்தது போல இலையும் தழையும் அணிய முடியுமா என்ன? அது அந்த வடிவத்தில் செய்யப்பட்ட துணியால் ஆன ஆடைதான். இந்த படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், படக்குழுவினர் செய்து கொடுத்த ஆபரணங்கள்தான். இந்த கதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் நடப்பது. அதனால் ஆபரணங்களுக்கு பதிலாக அவர்கள் மலர்களைதான் அணிந்தார்கள். அதிலேயே எனக்கு தோடு, மூக்குத்தி எல்லாம் செய்து கொடுத்திருந்தார்கள். " என்றார்.




Wednesday, July 20, 2011

யார் நினைச்சாலும் திருட்டு விசிடி யை ஒழிக்கவே முடியாது ! -டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்

'திருட்டு விசிடி யை ஒழிக்கவே முடியாது 'என்று 'ரௌத்திரம்' இசை வெளியீட்டு விழாவில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா-ஸ்ரேயா நடிக்கும்' ரௌத்திரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா  வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது.விழாவில் ஆர்.பி.சௌத்ரி,இயக்குனர்கள் எஸ்.ஏ .சந்திரசேகரன்,கே.எஸ்.ரவிக்குமார்,லிங்குசாமி,எஸ்.பி.ஜனநாதன் , விக்ரமன்,ராஜேஷ்,சாய் ரமணி,வெற்றிமாறன்,கோகுல் ,நடிகர்கள் ஆர்யா,ஜெயம் ரவி,ஜீவா,நடிகை ஸ்ரேயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.பாடல் குறுந்தகடை இயக்குனர்கள் சேர்ந்து வெளியிட நடிகர்கள் சேர்ந்து பெற்றுக்கொண்டனர்..விழாவில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியாதாவது: "ஜீவா நடிச்ச 'கோ' படத்தை ரெண்டு தடவை பார்த்தேன்.ஒரு தடவை தான் தியேட்டர்ல பார்த்தேன்.இன்னொரு தடவை சிடி யில்  தான் பார்த்தேன்.நான் முன்பே சொன்னது தான் ,படம் ரீலிஸ் பண்ணும்போதே படத்தோட ஒரிஜினல் சிடியை வெளியிட்டு விடலாம் அது ஒரு பக்கம் காசு வந்துகொண்டிருக்கும்.இதை ஏன் சொல்றேன்னா திருட்டு சிடி ஈ ,கொசு,ஈசல் மாதிரி தான். யார் நினைச்சாலும் திருட்டு விசிடி யை ஒழிக்கவே முடியாது. இதற்கு எஸ் .ஏ சந்திரசேகரன்  [தயாரிப்பாளர் சங்க தலைவர் ]முயற்சி எடுக்கவேண்டும்" என்றார். அடுத்து பேச வந்த எஸ் .ஏ சந்திரசேகரன்  இதை பற்றி  எதுவும் பேசவில்லை ."விஜய்யின் வளர்ச்சியால் தனக்கு பெருமை ஜீவாவின் வளர்ச்சியால் சௌத்ரிக்கு  பெருமை " என பெருமைகளை சொல்லி வாழ்த்திவிட்டு போனார்.

Sunday, July 3, 2011

விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் -'வாக்குமூலம்

க்கள்   பிரச்சனையை  சொல்லக்கூடிய,மக்களுக்கான சினிமாவாக மட்டுமேஉருவாகிவருவது குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள்
தான் என்று சொல்லலாம். 
"வாழ்க்கைக்குத் தேவையான-வாழ்க்கையை செம்மைப்படுத்துகிற முயற்சி தான் இந்த குறும்படங்கள்' என்கிறார் குறும்பட இயககுநர் க..சுப்பு.
இவர் இயக்கியிருக்கும்  குறும்படம் 'வாக்குமூலம்'.வேலிகாத்தான் என்று சொல்லக்கூடிய காட்டுக் கரவேல மரங்களின் வளர்ச்சியையும் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய ஆபத்தினையும்,மரபணு மாற்று விதைகள் மூலம் ஏற்படும் தீமைகளையும் கதாபாத்திரங்கள் மூலம் 'வாக்குமூலம்' கொடுக்கிறது இந்த குறும்படம்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த குறும்படத்தை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி? இயக்குனர்  க.சுப்புவிடம் கேட்டோம்.
"பெரிய இயக்குநர்களின் உதவியாளர் என்கிற முகவரி இருந்தால் உடனே படம் இயக்க வாய்ப்பு கிடைக்கிறது.அந்த ஒரே காரணத்திற்காகவாய்ப்புகொடுக்கப்பட்டுதோல்வியடைந்தபடங்கள்
நிறையஇருக்கின்றன.குறும்படங்கள்,திரைப்படம்இயக்குவதற்கான
சரியான முகவரியாக இருக்கும்என்றுநினைத்தேன்.இதன்மூலம் 
அவனுடையஆளுமை,சிந்தனைஇதெல்லாம் வெளிப்படுகிறது.
இதுநமக்குகிடைத்த ஒரு வரப்பிரசாதம்னு சொல்லுவேன்.
என் சொந்த ஊரான கும்பகோணத்தில் படிச்சிட்டு இருக்கும்போது ஒரு பொதுக்கூட்டத்தைப்பார்க்கிறேன்.நாம் விரும்புகிறோமோ,இல்லையோ 
பொதுவுடைமை தத்துவங்கள் நம்ம காதுகளில் விழும்.அப்படித்தான் அந்த மேடைப் பேச்சைக் கேட்க நேர்ந்தது.
வறட்சி பிரதேசத்திற்கான அடிப்படை காரணம்  நம்ம பஞ்சக் காலத்தில் ஒரு வல்லரசுகொடுத்த காட்டு கருவேலமரங்கள்தான்.காரணம்,அதை 
அழிக்கணும்னுபேசறாங்க.அது ஒருசெய்தியாக என்மனதில் பதிஞ்சு
 போனது.சென்னை வந்து சினிமாவில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தபோது அந்தசெய்திக்கான ஆதாரங்களை சேகரிக்கும்போது ரசாயனஉயிர்க்கொல்லிகள்,செயற்கை வண்டுகள்,ஆகாயத் தாமரைச் 
செடிகள்,கருவேல மரங்கள்,மரபணு மாற்றுவிதைகள்,இடத்தை கபளீகரம் பண்றது 
என கிட்டத்தட்ட 50  காரணங்களை தேர்ந்தெடுத்தேன். 
 நமக்குஇப்ப என்ன தேவை அப்படின்னு பார்க்கும்போது கருவேல மரங்களின்வளர்ச்சியில் காற்று உஷ்ணமாகி பூமி வெப்பமடைவது,
மரபணுமாற்றுவிதைகளினால் மனிதர்களும் ,விலங்குகளும்
 மலட்டுத்தன்மை அடைவது, உலக பொருளாதார மயமாக்களில் 
இடத்தைகபளீகரம்பண்றதுஎனமூன்று விசயங்கள் முதன்மையாக -
முக்கியமாய் தெரிந்தது.
இதை குறும்படமாகஎடுக்க முயற்சித்தபோது என்சமுதாய அக்கறையை
 புரிந்துகொண்டு நண்பர் மெடிக்கல் சத்யா தயாரிப்பதற்கு முன் வந்தார்.
அவர்கொடுத்தஊக்கமும் ,முதலீட்டுத் தொகையும் 'வாக்குமூலம்' உருவாக காரணமாக அமைந்தது."என்கிறார்.
க.சுப்பு திரைப்படம் இயக்கும்   முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
"வணிக ரீதியிலான படங்கள் செய்தாலும் என் கோப தாபங்கள் சமுதாயத்தைச் சார்ந்து இருக்கும்.காதல் படங்களிலும்  சமுதாய சிந்தனை இருக்கும்" என்கிறார்.
சமுதாய  சிந்தனையுள்ள படைப்பாளியை மக்கள் எப்போதும்  உற்சாமாக வரவேற்பார்கள்.

 
    

Thursday, June 23, 2011

எப்படி இருக்கு அவன்-இவன் ?


விஷால், ஆர்யா, ஆர்.கே., ஜி.எம். குமார், ஜனனி ஐயர், மது ஷாலினி, அம்பிகா, மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு -ஆர்தர் ஏ. வில்சன், இசை -யுவன் சங்கர் ராஜா, இயக்கம் -பாலா, தயாரிப்பு- ஏ.ஜி.எஸ். என்டெர்டெய்ன்மென்ட்.
       

தன்னைத்தானே 'ஹைனஸ் ' என்று சொல்லிக்கொள்ளும்  ஜமீன்தார் ஜி.எம். குமார் திருமணமாகாத வயதானவர். அதே ஊரில் திருட்டுத் தொழில் செய்யும் விஷாலும் ஆர்யாவும் ஒரு தந்தை-இரு தாய்களுக்கு பிறந்த அண்ணன்-தம்பி.

ஜி.எம். குமார் இறைச்சிக்காக மாடுகளை கடத்தும் ஆர்.கே.வை மிருக வதைத் தடுப்பு அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுக்க கைதாகிறார் ஆர்.கே.. விடுதலையாகி வரும் ஆர்.கே., ஜி.எம். குமாரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து கொலை செய்து மரத்தில் தொங்க விடுகிறார். இதைக் கண்டு கொதித்தெழும் விஷாலும், ஆர்யாவும், ஆர்.கே.வை பழி வாங்குவது கிளைமாக்ஸ்.

பெண் தன்மை நிறைந்தவராக, மாறு கண் தோற்றத்துடன் நடித்திருக்கும் விஷால் ஆரம்ப காட்சியில் போடும் ஆட்டம் அமர்க்களம். நடிகர் சூர்யா முன்பு மேடையில் அவர் நவரசம் காட்டி நடிக்கும்போது படத்தில் வரும் கதாபாத்திரங்களை மட்டுமல்ல நம்மையும் கலங்க வைப்பதோடு ஆச்சர்யபடுத்துகிறார். விஷாலின் சினிமா கேரியரில் இது மறக்க முடியாத படம் என்று சொல்லலாம். நிச்சயம் அவரது நடிப்புக்கு விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வித்தியாசமான கெட்-அப் களில் நகைச்சுவை நடிப்பில் கலக்கியிருக்கிறார் ஆர்யா. கதையை நகர்த்திச் செல்லும் கதாபாத்திரத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் கவனிக்க வைக்கிறார் ஆர்.கே..

ஆர்யா காதலிக்கும் பெண் தன் எதிரியின் மகள் என்று தெரிந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜி.எம். குமாரின் மனதை நோகடிக்கும்படியாக ஆர்யா பேசி விட்டு போக, ஜி.எம். குமார் கண்ணாடி முன்னால் நின்று தன்னைத்தானே நொந்து திட்டித் தீர்ப்பதும், புறாக்களிடம் மனம் விட்டு பேசுவதும், பின் மழையில் நனைந்து கொண்டே ஆர்யாவின் வீட்டுக்குத் தேடிப் போய் பேசுவதும் ஜி.எம். குமாரின் நடிப்பில் முத்திரைப் பதிக்கும் காட்சிகள்.

கிளைமாக்ஸில் அவரை நிர்வாணமாக்கி ஆர்.கே. பண்ணும் அட்டூழியத்தால் ஆர்.கே. மீது வரவேண்டிய வெறுப்பு, மாறாக 'ஏன் இப்படி இந்த கதாபாத்திரத்தை அவஸ்தை படுத்துகிறார்?' என இயக்குநர் பாலா மீதே ஏற்படுகிறது.

படத்தில் பெரும்பாலான கேரக்டர்கள் கேனையன்களாகவும் கேனச்சிகளாகவுமே வெளிப்பட்டிருக்கிறது. பல காட்சிகள் 'இது பாலா படம் தானா?' என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகள் மாங்கா மடச்சிகளாகவே சித்தரிக்கப் படுவார்கள். பாலாவும் அதைத் தான் செய்திருக்கிறார். படிப்பறிவு இல்லாத திருட்டுத் தொழில் செய்யும் விஷால், ஆர்யாவை கான்ஸ்டபிள்  ஜனனியும், படிக்கும் மதுஷாலினியும் சொக்கிப் போய் காதலிப்பது வேடிக்கை.
நறுமணம் வீசும் வசன‌ங்கள் மட்டுமல்ல நாத்தம் புடிச்ச வசனங்களும் தனக்கு நல்லாவே வரும் என நிருபித்திருக்கிறார் வசனகர்த்தா ராமகிருஷ்ணன். 'பெண்கள் அணியும் பேண்ட்டில் ஜிப் எதற்கு?' என்ற கிளுகிளு ஆராய்ச்சி கேள்வியை வைக்கும் அவர் , இறைச்சிக்காக மாடு கடத்தும் ஆர்.கே. மூலம் 'வெளிமாநிலத்தில் இருந்து ஒட்டகத்தை இங்கே கொண்டுவந்து குர்பானி கொடுக்கறதை போய் கேட்க வேண்டியது தானே?' என மிருகவதை தடுப்பு அதிகாரிகளுக்கு வசனத்தால் சூடு வைக்கிறார்.

திருடர்கள் அனைவரையும் அழைத்து கறி, தண்ணி விருந்து வைத்து 'இனி திருடமாட்டோம்' என சத்தியம் வாங்குகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர். இக்காட்சி ரசிக்க வைத்தாலும் எந்த காலக் கட்டத்தில் இது நடக்கிறது? என்ற சந்தேகக் கேள்வியையும் வைக்கிறது.

பீடி குடிக்கும் அம்பிகா, மகனோடு குத்தாட்டம் போடும் பிரபாரமேஷ், மாவாட்டும் கணவனாக 'சூப்பர் சிங்கர்ஸ் ' புகழ் அனந்த்தராமன், நெற்றியில் பட்டையுடன் வரும் இன்ஸ்பெக்டர் என வித்தியாசமான கதாபத்திரங்களில் வருபவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

யுவனின் இசையில் 'ஏ...டிரியா டிரியா டோய்...' என்ற பாடலைத் தவிர வேறு எதுவும் பெரிதாய் எடுபடவில்லை. பின்னனி இசையும், ஆர்த‌ர் வில்சனின் ஒளிப்பதிவும் பலம் சேர்க்கிறது.

இது தனது படம் என்ற முத்திரையில் இருந்து விலகி பார்வையாளனை நிறையவே சோதித்து இருக்கிறார் பாலா.

மீனவர்களுடன் இணைந்து போராட்டம்- சீமான் அறிக்கை:

லங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்காவிட்டால் தமிழக மீனவர்களைத் திரட்டி அவர்களுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை:

இது வரை 550 க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை செய்தும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தும் அவர்களைச் சித்திரவதை செய்த சிங்களப் படை சிறிது காலம் தனது வெறியாட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது.

சில நாட்களுக்கு முன் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததன் பேரில் 16-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இப்பொழுது மீண்டும் சிங்களக் கடற்படை தனது அட்டூழியத்தையும் வெறித்தனத்தையும் ஆரம்பித்துள்ளது.


ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன் தினம் காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் மீன்பிடிக்கச் சென்ற 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் வலைகளை விரித்து மீன்களை பிடித்து கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த சிங்கள கடற்படை வீரர்கள் நமது மீனவர்களை அச்சுறுத்தியும் மிரட்டியும் மிக கடுமையாக நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சிந்தாதுரை, செல்வம், பேரின்பம், அழகேசன், கணேசன், முத்துக்காளை, ராமகிருஷ்ணன், ராம சாமி, உள்பட 23 மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்று,மன்னார் கடற்படை முகாமில் வைத்துள்ளது.

இந்த அட்டுழியத்தை இந்த முறையாவது நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்த நிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அடிக்கடி கொலை வெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
         

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம், பாம்பன், தங்கச்சிமடம் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கைளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு தனது சிறப்புத்தூதரை இன்று உடனடியாக கொழும்பு அனுப்பி சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ராமேசுவரத்தில் போராட்டம் நடத்தும் மீனவர் அமைப்புக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மிகப் பெரிய போராட்டமாக முன்னெடுக்கும் .
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, June 21, 2011

சாய்பாபா வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது !

சத்யசாய்பாபவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்க போவதாக சினிமா டைரக்டர் கேடி ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். பிரபல சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் காங்கிரஸ் எம்,பியுமான ஹரிராம ஜோகையா, மற்றும் ஜோனவிதுலா ராமலிங்கேஸ்வரா ராவ் ஆகியோர் புட்டபர்த்தி நகருக்கு வருகை தந்தனர். படம் எடுப்பது குறித்து கோடி ராமகிருஷ்ணா கூறியதாவது: சத்யசாய்பாபாவின் படம் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்படும் என்றும், இந்தியமொழிகளில் பெரும்பான்மை மொழிகளில் தயாரித்து வெளியிடப்படும் என்றும் கூறினார்.

'மாவீரன்'-விமர்சனம்

றுஜென்மம் பற்றிய கதை. தெலுங்கில் வெற்றி பெற்ற 'மஹதீரா' தமிழில் 'மாவீரன்' என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.

ராம்சரண்தேஜா (சிரஞ்சிவியின் மகன்), காஜல் அகர்வால், பன்ஹரி, சரத்பாபு, தேவ்கில் பிரமானந்தம் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு... செந்தில்குமார், இசை... மரகதமணி, இயக்கம்... ராஜமெளலி, தயாரிப்பு... கீதா ஆர்ட்ஸ்.

கி.பி. 1600 ஆம் ஆண்டில் ராஜவம்சத்தில் பிறந்த இளவரசி காஜல் அகர்வாலுக்கும், போர் படைத்தளபதி ராம்சரண்தேஜாவுக்கும் காதல் மலர்கிறது. இளவரசியின் மாமன் சதி செய்து காதலர்களை சேர விடாமல் செய்கிறார். எனக்கு கிடைக்காத எதுவும் யாருக்கும் கிடைக்க கூடாது என்று அடிக்கடி சொல்லும் மான், தேவ்கில் இளவரசியை கொன்றுவிட, அவனை அழித்து விட்டு உயிரை மாய்த்து கொள்கிறார் தளபதி. 400 ஆண்டுகள் கழித்து மறு ஜென்மம் எடுக்கிறார்கள் மூவரும். மறு ஜென்மத்திலும் அதே காதலர்கள், மாமனே வில்லன். களமும் பின்னணியும் வேறு. தடைகளை உடைத்து மறுஜென்மத்தில் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது மீதிக்கதை.

இக்காலத்து இளைஞனாக பைக் பாய்ச்சல், குத்துப் பாடு என்று இருக்கிற ராம்சரண், காஜலின் கை ஸ்பரிசம் தன் கையில் பட்டதும் காதலைமட்டுமல்ல பூர்வ ஜென்ம கதையையும் உணர்ந்து கொள்ள முன் ஜென்மத்தில் என்ன நடந்தது என்று விரிகிறது கதை.

படத்தின் பலமே முன் ஜென்மக் காட்சிகள் அடங்கிய ப்ளாஷ்பேக் காட்சிகள்தான். என்னவொரு கலைநயம்.. கோட்டைகள், அரண்மனை, போர்க்களம் பின்னணி என எல்லாமே பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. கலை இயக்குநர் எஸ்.ரவிந்தரின் செய் தொழில் சேர்த்தி பளிச்சிடுகிறது.

ராம்சரண்தேஜா துறு துறு இளைஞனாக வசீகரிக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், நடனத்திலும் அட்ராசக்கை என சொல்ல வைக்கிறார். ஆனால் காதல் காட்சியில் கூட ஏனோ முகம் இறுகிப்போயே இருக்கிறது. அரசனுக்காக காதலைத் தியாகம் செய்யும் நல்ல நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது.

உண்மையான ராஜகுமாரி மாதி கொள்ளை அழகாக இருக்கிறார் காஜல் அகர்வால். நடிப்பும் அழகு.

மரகதமணியின் பின்னணி இசை உற்சாகமூட்டுகிறது.
'ஆசை ஆசையாய்' பாடல் இனிமை. கலை இயக்கமும் ஒளிப்பதிவும் இரண்டு தூண்கள் என்று சொல்லலாம். வசனம்... பாக்யராஜ். உதட்டசைவுக்கு ஏற்ப ஒரு தமி படத்திற்கு எழுதியதுபோல உள்ளது. சபாஷ் படத்தின் இன்னொரு ஹீரோ கிராபிக்ஸ்தான். நிஜம் போலவே நம்பகத்தன்மையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே மறுஜென்ம கதைகள் வந்திருந்தாலும் திரைக்கதையிலும் பிரமாண்டத்திலும் மாறுபட்டிருக்கிறது. ஆனால் தொட்ட‌துக்கெல்லாம் பாட்டு என வருவது இன்னமும் ஆந்திர ரசனை மாறவில்லையா என்று கேட்கத் தோன்றுகிறது.

நவீனமும், புராதனமும் இணைந்த வித்தியாசமான கமர்ஷியல் மசாலாவாக மாவீரன் கொடுத்திருக்கிறார், இயக்குநர்.

Friday, June 10, 2011

ஒருமாசம் என்னை அலைய விட்டார் பாலா.

'எல்லாம் அவன் செயல்' ,'அழகர்மலை' படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஆர் .கே.தற்போது 'புலிவேஷம்','கடமை கண்ணியம் கட்டுப்பாடு 'படங்களில் கதாநாயகனாக நடித்துவரும் அவர்,பாலாவின் 'அவன்-இவன்  'படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.'அவன் இவன் 'படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி அவர் கூறுகையில்; "வில்லன் கேரக்டர் என்று சொல்வதைவிட அது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்று சொல்லலாம்.மாட்டு இறைச்சியை   வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழில் செய்யும் கேரக்டரில் நடித்துள்ளேன்.விஷால் கூட சண்டைக் காட்சியும் இருக்கிறது.பொதுவா பாலா சார் திருப்தி வரும் வரை எடுப்பார்.ஆனால் நான் நடிச்ச காட்சிகள் எல்லாம் ரெண்டு டேக்கிலேயே ஒ.கே.பண்ணி அவரிடம் பாராட்டு வாங்கியிருக்கேன்.இந்த கேரக்டருக்காக நிறைய உழைத்திருக்கேன்  ஒரு மாசம் கிட்ட மேக்கப்போட்டு நடிக்காமல் இருந்திருக்கேன் தினமும் ஷூட்டிங் ஸ்பாட் வந்துடுவேன்அந்த கேரக்டரை உள் வாங்குவதற்காக  .ஒருமாசம் என்னை ஷூட்டிங்  ஸ்பாட்டிலேயே அலைய விட்டார் பாலா. படம் பார்த்தவங்க    எல்லாரும் அது ஆர்.கே.யா என்று கேட்டாங்க அந்த அளவுக்கு என்னை மாற்றியிருக்கிறார்  பாலா." என்றார்.தொடர்ந்து வில்லனாக வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு "எனக்கு கேரக்டர் முக்கியத்துவமாக தெரிந்தால் தாராளமாக  நடிப்பேன்.வில்லனாக நடித்தால் கண்டிப்பாக கற்பழிப்பு காட்சியில் நடிக்க மாட்டேன்.அதை கொள்கையாகவே வைத்திருக்கேன் "என்றார்.

Friday, June 3, 2011

எழுத்தாளன் என்றுமே சினிமாவில் தோற்கமாட்டான் !-கவிஞர் வைரமுத்து

'னேரி பிக்சர்ஸ்' 'நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ' சேவற்கொடி' .இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. ஏவிஎம் சரவணன் முதல் குறுந்தகடை வெளியிட,' குமுதம் 'நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ஜவகர் பழனியப்பன் பெற்றுகொண்டார். இந்த நிகழ்ச்சியில் வசந்த பவன் ஹோட்டல்களின் உரிமையாளர் ரவி, இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சீமான் , ராதாமோகன் சீனு ராமசாமிஆகியோர் கலந்து கொண்டனர்.
' சேவற்கொடி ' படத்தில் புதுமுகம் அருண்பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக மலையாள நடிகை பாமா நடிக்கிறார். சீமான்,ராதாமோகன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இரா.சுப்பிரமணியன் இயக்குகிறார்
  பி..செல்லத்துரை ஒளிப்பதிவு செய்துள்ளார்.புதிய இசையமைப்பாளர் சி.சத்யா இசையமைத்திருக்கிறார். கவிபேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதி இருக்கிறார்.
விழாவில் இயக்குனர் கே .வி.ஆனந்த் பேசும்போது "முதல்வன்\' படத்தின் 'அழகான ராட்சசியே ' பாடலில் வரும் வரிகளுக்காக நாயகன் நாயகி 'உக்கி' போட முடியாததால் தான் தலைகீழாக நின்று ஒளிப்பதிவு செய்ய வேண்டியிருந்தது "என்றும் அந்த அளவுக்கு தன வரிகள் மூலம் வேலை வாங்குபவர் வைரமுத்து' என்றும் குறிப்பிட்டார்.
"இது புதுமுகங்கள் நடித்ததுமட்டுமல்ல புதிய தொழிநுட்ப கலைஞர்கள் டீமே அறிமுகமாகும் படம்."என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டியதுடன் தான் தயாரிக்கும் படத்திலும் இந்த சத்யா தான் இசையமைப்பாளர் என்றார்."'வைரமுத்து ஓர் அனுபவமிக்க இளைஞர்'என்று ஆரம்பித்த குமுதம்உரிமையாளர் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் ,அமெரிக்காவில் தமிழ் படங்கள் ரசிக்கப்படுவதையும் பாராட்டபடுவதையும் நினவு கூர்ந்தார்.
ஏ.வி எம்.சரவணன் பேசும்போது "இந்த படத்தில் நிறைய புதுமுகங்கள் இருக்கிறார்கள்..புதியவர்கள்தான் தமிழ் சினிமாவை வாழவைத்து கொண்டிருக்கிறார்கள.'பராசக்தி'யில் சிவாஜி கூட புதுமுகம் தான்".என்றார்""'ஆறாவதுமுறை தேசிய விருது பெற்றிருக்கும் வைரமுத்துவை அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்ட வேண்டும் " என்றார்.அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.
புதுமுக இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் மேடையில் நேரடியாக பாடினார்கள். பாடல்கள்களின் வரிகளும், இசையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரையுமே கவர்ந்தது. நிகழ்ச்சியில் பேசிய அத்தனை பேரும் வைரமுத்துவின் பாடல்களின் வரிகளைப் பற்றி பாராட்டி பேச, இயக்குநர் சீனு ராமசாமி, வைரமுத்து புதிய இயக்குநர்களுக்கு எந்த வகையில் ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதையும், அவருடன் பணியாற்றிய தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் வைரமுத்து பேசும்போது "ஆறாவது முறை தேசியவிருதுபெற்றிருக்கிறேன்.இது எனக்கானது அல்ல.தமிழுக்கானது.இந்தியாவின் தேசிய மொழிகளில் திரைப்பாடலில் அதிக விருது பெரும் சிறந்த மொழியாக தமிழ் இருக்கிறது.ஆறு விருது பெற்றதில் நான் ஒரு கருவிதான்.என்னை கருவியாக்கி இயக்கியிருப்பவர்கள் பலர்.அப்படி என்னை இயக்குபவர்கள் இருக்கும்வரை ,என்னிடம் உணர்ச்சிஇருக்கும்வரை நான் எழுதிக் கொண்டே இருப்பேன்.என்னிடம் தமிழ் தீராதவரை ஓடிக்கொண்டே இருப்பேன்.புதிய இயக்குனர்களை நான் ஆதரிப்பதாக சீனு ராமசாமி சொன்னார். "புதியவர்களை என்றுமே நான் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ என்று பார்ப்பதில்லை. எந்த விதைக்குள் எந்த விருட்சம் இருக்கிறது என்றுதான் பார்ப்பேன். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்றான் பாரதி..நெருப்பு பொறிகளில் சிறிய பொறி பெரிய பொறி என்று எதுவுமில்லை.இவர்கள் எல்லாம் சிறு தீப்பொறி என்றாலும் மூங்கில் காட்டியே கொளுத்தி விடும் சக்தி படைத்தவர்கள்.அந்த வகையில் இயக்குநர் சுப்பிரமணியனும் இந்த படத்தின் மூலம் வெற்றி பெறுவார்.'சேவற்கொடி 'இயக்குநர் சுப்பிரமணியன் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். எழுத்தாளன் என்றுமே சினிமாவில் தோற்கமாட்டான். அந்த வகையில் சேவற்கொடியும் வெற்றி பெறும். தமிழ் சினிமா இப்போது புத்துணர்ச்சியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
மேலை நாட்டு திரைப்படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு இங்கு திறமைசாலிகள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு நான் ஒன்று சொல்லிகொள்கிறேன். நீங்கள் புதிய இயக்குநர்களை தேர்ந்தெடுக்கும் போது நன்றாக யோசியுங்கள். அவர்களை தேர்ந்தெடுத்தப் பிறகு யோசிக்காதிர்கள். அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். அப்போதுதான் சாதித்து காட்டுவார்கள்." என்றார். விழாவுக்கு வந்த அனைவரையும் நிர்வாகத் தயாரிப்பாளர் சாய் ஜெகன் வரவேற்று பேசினார்.இறுதியில் இயக்குனர் இரா.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
 

Thursday, June 2, 2011

விக்ரம் ஜிம் பாயாக நடிக்கும் 'ராஜ பாட்டை '

மலுக்கு பிறகு நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி வருபவர் விக்ரம் விரைவில் வெளிவர இருக்கும் 'தெய்வத்திருமகன்' படத்தில் ஐந்து வயது சிறுவனின் மனநிலையை வெளிப்படுத்தும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.இதை தொடர்ந்தது 'ராஜ பாட்டை' என்ற படத்தில் நடிக்க விருக்கிறார்.'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை' என்று  மாற்பட்ட  கதைக்களங்களில் பயணிக்கும்  சுசீந்தரன் தான்  விக்ரமை வைத்து 'ராஜ பாட்டை' யை இயக்குகிறார். இபடத்தின் விக்ரம். ஜிம் பாய் கேரக்டரில் நடிக்கிறார்.அவரது ஜோடியாக 'வாண்டட் 'தெலுங்கு படத்தில் நடித்த தீக்சா ஷெத் நடிக்கிறார்.  இவர்களுடன்  தம்பி ராமையா,டைரக்டர்                       கே.விஸ்வநாத், அருள்தாஸ்  ஆகியோரும் நடிக்கின்றனர்.யுவன் சங்கர் ராஜா இசையமைகிறார்..மதி ஒளிப்பதிவு செய்கிறார். சீனுவாசன் கதைக்கு பாஸ்கர்சக்தி வசனம் எழுதுகிறார்.திரைக்கதை,இயக்கம்-சுசீந்திரன்..எஸ்.பி.கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதை முழுக்க முழுக்க சென்னையில்  நடப்பதால் முழு படபிடிப்பும்  சென்னையிலேயே  நடைபெறுகிறது.பாடல் காட்சி வெளிநாடுகளில் நடைபெறவிருக்கிறது.இதன் தொடக்க விழா ஜூன் 7 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.
         

எத்தன்-திரை விமர்சனம்

டன் மேல் கடன் வாங்கி நிம்மதி இழக்கும் இளைஞனின் கதை.

விமல், சனுஷா, சரோஜித், ஜெயபிரகாஷ், மனோபாலா, எம்.என். பாஸ்கர், மயில்சாமி, சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு... கே.பி.ஆர். ரமேஷ், இசை-தாஜ்நூர்,இயக்கம்... எல். சுரேஷ், தயாரிப்பு... ஷேரலி பிலிம்ஸ்.

திருமணத்திற்கு முதல்நாள் இரவு மாப்பிள்ளைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மணப்பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடுகிறார் விமல். அவர் யார் காதலரா ? என்றால் இல்லை.. இப்படி எதிர்பார்ப்போடு படம் ஆரம்பிக்கிறது. இருவரும் சென்னைக்கு பஸ்ஸில் போகின்றனர்.

இரவு உணவுக்காக ஹோட்டலில் பஸ் நிறுத்தப்பட, அங்கே மாப்பிள்ளையின் நண்பன் பார்த்துவிட, அவரிடம் ப்ளாஷ்பேக்கில் நடந்த சம்பவங்களை விமல் சொல்வதாக கதை பயணிக்கிறது.

கடன் வாங்கி வீடு கட்டினால் பின்னாளில் அந்த சுமை மகனுக்கு ஏற்பட்டு விடும் என்று கஷ்டப்பட்டு சொந்தமாக வீடு கட்டி சுயமரியாதையுடன் கடன் வாங்க கூடாது என்று வாழ்ந்து வருபவர் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ். ஆனால் அவரது மகன்  விமலோ இதற்கு நேர் மாறானவர். கடன் வாங்குவதையே கொள்கையாக கொண்டவர். கடன் வாங்கி தொழில் செய்து நஷ்டப்பட்டு மீண்டும் மீண்டும் கடன் வாங்குகிறார். ஒருகட்டத்தில் கடன் கழுத்தை நெறிக்க உயிர்ப் பயத்தில் ஓடி ஒளிகிறார். வீட்டை அடமானம் வைத்து கடன்களை அடைக்கிறார் விமல் அப்பா. விமல் திருந்தி வெலைக்குப் போகிறார்.

இதற்கிடையில் விமலின் வீட்டுக்கு பூ பறிக்க வரும் ச்னுஷா அங்கே தன் மாமன் கொடுத்த சங்கிலியை தவறவிட்டு விடுகிறார். அதை 'ஆட்டை'யபோட்டு அவளது மாமன் கடையிலேயே அடகு வைக்குகிறார் விமல். சங்கிலி விவகாரம் தெரிந்து விமலை அடித்து உதைக்க, அந்த பணைத்தையும் அவரது அப்பாவே செட்டில் பண்ணுகிறார். பிடிக்காத மாமனுக்கு கழுத்தை நீட்டக் கூடாது என்று தவிக்கிற சனுஷா விமலின் உதவியை நாட அவரை மீட்கிறார் விமல்.. சென்னைக்கு வர அங்கே வில்லன், கோஷ்டியுடன் துரத்த, முடிவு என்ன என்பதே கிளைமாக்ஸ்.

விமலுக்கு படத்தில் எத்தனாக டைட்டில் ரோல். அவரது இயல்பான தோற்றமும் பேச்சும் களவாணியைபோல எத்தனுக்கும் பலமாக அமைந்துள்ளது.

கடன் வாங்குவதில் சாமர்த்தியசாலியான விமல் பின்பு கடன் வசூலிக்கும் வேலையில் சேர்வது கலகலப்பு. கடன் பற்றி பேசினாலே பிடிக்காத அப்பா. பேசினாலே கடன் வாங்கி விடும் மகன் இந்தநல்ல பாத்திர முரண்பாடு சுவையாக உள்ளது.

நாயகி சனுஷா ஆளும் அழகு. நடிப்பும் அழகு. கண்களே வசனம் பேசுகின்றன. மாமனாக வரும் சரோஜித் புதியவர் என்று நம்பமுடியவில்லை. ஆனால் அவருக்கான பின்னனி குரலும் மாடுலேஷனும் தெலுங்கு படம் போன்ற உணர்வை தருகிறது.

மயில்சாமி ஏற்பாடு செய்யும் எம்.எஸ் . பாஸ்கரின் வசிய மந்திரம் செம காமெடி. ஒளிப்பதிவு 'பளிச்'என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியாது. காரணம் 'பளிச்'' படத்தில் பற்றாதுதான். தாஜ்தூரின் இசையில் நா.முத்துக்குமார் எழுதியுள்ள ''மழையுதிர்காலம்' சுகமான மெலோடி. பின்னணி இசையில் இன்னும் அவர் உழைக்க வேண்டும் என்பதற்கு 'எத்தன்'உதாரணம்.

விமல் கடன் வாங்குகிறார். துரத்துகிறார்கள் சமாளிக்கிறார். என காமெடியாக சொல்லிருந்தாலும் அவர் எதற்காக வாங்குகிறார்? என்ன தொழிலில் எப்படி நஷ்டமானார்? என்பதற்கான அழுத்தமான காட்சிகள் இல்லாத்தால் .அவர் மீது சிம்பத்தி வரவில்லை. பக்கத்து வீட்டு பையன் போல இருந்தாலும் நடிகனாகவே பாவிக்க முடிகிறது. மற்றபடி கலகலப்பாக கதை சொல்லி கடன் கொடுமையின் கருத்தும் சொல்லி முடித்துள்ள இயக்குநர் எல். சுரேஷின் திறமையை பாராட்டலாம்.