தன்னைத்தானே 'ஹைனஸ் ' என்று சொல்லிக்கொள்ளும் ஜமீன்தார் ஜி.எம். குமார் திருமணமாகாத வயதானவர். அதே ஊரில் திருட்டுத் தொழில் செய்யும் விஷாலும் ஆர்யாவும் ஒரு தந்தை-இரு தாய்களுக்கு பிறந்த அண்ணன்-தம்பி.
ஜி.எம். குமார் இறைச்சிக்காக மாடுகளை கடத்தும் ஆர்.கே.வை மிருக வதைத் தடுப்பு அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுக்க கைதாகிறார் ஆர்.கே.. விடுதலையாகி வரும் ஆர்.கே., ஜி.எம். குமாரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து கொலை செய்து மரத்தில் தொங்க விடுகிறார். இதைக் கண்டு கொதித்தெழும் விஷாலும், ஆர்யாவும், ஆர்.கே.வை பழி வாங்குவது கிளைமாக்ஸ்.
பெண் தன்மை நிறைந்தவராக, மாறு கண் தோற்றத்துடன் நடித்திருக்கும் விஷால் ஆரம்ப காட்சியில் போடும் ஆட்டம் அமர்க்களம். நடிகர் சூர்யா முன்பு மேடையில் அவர் நவரசம் காட்டி நடிக்கும்போது படத்தில் வரும் கதாபாத்திரங்களை மட்டுமல்ல நம்மையும் கலங்க வைப்பதோடு ஆச்சர்யபடுத்துகிறார். விஷாலின் சினிமா கேரியரில் இது மறக்க முடியாத படம் என்று சொல்லலாம். நிச்சயம் அவரது நடிப்புக்கு விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வித்தியாசமான கெட்-அப் களில் நகைச்சுவை நடிப்பில் கலக்கியிருக்கிறார் ஆர்யா. கதையை நகர்த்திச் செல்லும் கதாபாத்திரத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் கவனிக்க வைக்கிறார் ஆர்.கே..
ஆர்யா காதலிக்கும் பெண் தன் எதிரியின் மகள் என்று தெரிந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜி.எம். குமாரின் மனதை நோகடிக்கும்படியாக ஆர்யா பேசி விட்டு போக, ஜி.எம். குமார் கண்ணாடி முன்னால் நின்று தன்னைத்தானே நொந்து திட்டித் தீர்ப்பதும், புறாக்களிடம் மனம் விட்டு பேசுவதும், பின் மழையில் நனைந்து கொண்டே ஆர்யாவின் வீட்டுக்குத் தேடிப் போய் பேசுவதும் ஜி.எம். குமாரின் நடிப்பில் முத்திரைப் பதிக்கும் காட்சிகள்.
கிளைமாக்ஸில் அவரை நிர்வாணமாக்கி ஆர்.கே. பண்ணும் அட்டூழியத்தால் ஆர்.கே. மீது வரவேண்டிய வெறுப்பு, மாறாக 'ஏன் இப்படி இந்த கதாபாத்திரத்தை அவஸ்தை படுத்துகிறார்?' என இயக்குநர் பாலா மீதே ஏற்படுகிறது.
படத்தில் பெரும்பாலான கேரக்டர்கள் கேனையன்களாகவும் கேனச்சிகளாகவுமே வெளிப்பட்டிருக்கிறது. பல காட்சிகள் 'இது பாலா படம் தானா?' என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகள் மாங்கா மடச்சிகளாகவே சித்தரிக்கப் படுவார்கள். பாலாவும் அதைத் தான் செய்திருக்கிறார். படிப்பறிவு இல்லாத திருட்டுத் தொழில் செய்யும் விஷால், ஆர்யாவை கான்ஸ்டபிள் ஜனனியும், படிக்கும் மதுஷாலினியும் சொக்கிப் போய் காதலிப்பது வேடிக்கை.
நறுமணம் வீசும் வசனங்கள் மட்டுமல்ல நாத்தம் புடிச்ச வசனங்களும் தனக்கு நல்லாவே வரும் என நிருபித்திருக்கிறார் வசனகர்த்தா ராமகிருஷ்ணன். 'பெண்கள் அணியும் பேண்ட்டில் ஜிப் எதற்கு?' என்ற கிளுகிளு ஆராய்ச்சி கேள்வியை வைக்கும் அவர் , இறைச்சிக்காக மாடு கடத்தும் ஆர்.கே. மூலம் 'வெளிமாநிலத்தில் இருந்து ஒட்டகத்தை இங்கே கொண்டுவந்து குர்பானி கொடுக்கறதை போய் கேட்க வேண்டியது தானே?' என மிருகவதை தடுப்பு அதிகாரிகளுக்கு வசனத்தால் சூடு வைக்கிறார்.
திருடர்கள் அனைவரையும் அழைத்து கறி, தண்ணி விருந்து வைத்து 'இனி திருடமாட்டோம்' என சத்தியம் வாங்குகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர். இக்காட்சி ரசிக்க வைத்தாலும் எந்த காலக் கட்டத்தில் இது நடக்கிறது? என்ற சந்தேகக் கேள்வியையும் வைக்கிறது.
பீடி குடிக்கும் அம்பிகா, மகனோடு குத்தாட்டம் போடும் பிரபாரமேஷ், மாவாட்டும் கணவனாக 'சூப்பர் சிங்கர்ஸ் ' புகழ் அனந்த்தராமன், நெற்றியில் பட்டையுடன் வரும் இன்ஸ்பெக்டர் என வித்தியாசமான கதாபத்திரங்களில் வருபவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
யுவனின் இசையில் 'ஏ...டிரியா டிரியா டோய்...' என்ற பாடலைத் தவிர வேறு எதுவும் பெரிதாய் எடுபடவில்லை. பின்னனி இசையும், ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவும் பலம் சேர்க்கிறது.
இது தனது படம் என்ற முத்திரையில் இருந்து விலகி பார்வையாளனை நிறையவே சோதித்து இருக்கிறார் பாலா.

No comments:
Post a Comment