இயக்குநர் மணிவண்ணனின் இயக்கிய 'அமைதிப் படை'யின் இரண்டாம் பாகமான 'நாகராஜசோழன் எம்ஏ,எம் எல் ஏ 'படத்தில் சத்யராஜுடன் இணைந்து சீமானும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தில் நடித்தது பற்றி அவர் கூறும்போது :
"இந்த சினிமா மொழியை என்னைப் போன்றவர்களுக்கு மிக எளிமையாகக் கற்றுத் தந்தவர் என் அப்பா மணிவண்ணன்.
எந்தக் காட்சியையும் அவர் பேப்பரில் எழுதிவைத்து காட்சிப்படுத்தியதில்லை. படப்பிடிப்பு தளத்துக்கு போன பிறகுதான் காட்சிகளைத் தீர்மானிப்பார்.
வசனங்கள் அப்படியே அருவி மாதிரி வந்து விழும். அதைப் பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கும்.
ஒரு காட்சிகளில் வசனம் இன்னும் நன்றாக இருக்கலாம் என நான் சொல்வேன். உடனே அவர், அப்படியா... சரி, ஒரு டீ கொடு என்பார். அதை அருந்துவிட்டு... ஒண்ணும் சரியா வரலியேடா... ஒரு சிகரெட் கொடு என்பார். அதை ஒரு முறை இழுத்துவிட்டு, அடுத்த நொடியில் அனல் பறக்கும் வசனம் வந்துவிழும். 'பார்த்தியா.. நீ கேட்ட வசனம், இந்த சிகரெட்ல இருந்திருக்கு' என்பார்.
அதேபோல, படப்பிடிப்பின்போது, சில நடிகர்கள் என்னிடம் அல்லது என்னைப் போல உதவியாளராக இருந்த நண்பன் சுந்தர் சியிடம் போய், அடுத்த காட்சி என்னவென்று கேட்பார்கள். அது எங்களுக்கு தெரிந்தால்தானே சொல்வதற்கு. நாங்கள் அவர்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு நகர்ந்துவிடுவோம். இன்னொன்று அது என்ன காட்சி என்று என் அப்பா மணிவண்ணனுக்கும்கூடத் தெரியாது. அந்த இடத்தில்தான் அதை தீர்மானிப்பார். யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் மெருகேற்றி பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பார்.
இந்த நாகராஜசோழன் திரைப்படம் வெறும் அரசியல் படமல்ல. எமது ஈழ மக்களின் வலியை, அவர்களுக்கு நேர்ந்த கொடூரத்தின் உவமானமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை நம் மக்களின் கதை.
சத்யராஜ் மற்றும் என் அப்பா மணிவண்ணன் இருவருக்கும் ஒரே அலைவரிசையில் சிந்திப்பவர்கள். மணிவண்ணன் எழுத்துக்கு உயிர்தரும் நடிப்பு சத்யராஜூடையது. அவருக்குப் பிடிக்காமல் எப்படி மணிவண்ணன் எழுத்தை உச்சரிப்பார்... ஆகவே அவருக்குள்ளும் அரசியல் இருக்கிறது.
இந்தப் படத்தில் என் தம்பி ரகுவண்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு இனி திரையுலகில் சிறப்பான இடத்தை இந்தப் படம் பெற்றுத் தரும்," என்றார்.



No comments:
Post a Comment